March 25, 2006

காங்கிரசு கட்சியா? கலவர கூடாரமா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு கண்டுள்ள காங்கிரசு கட்சிக்கு, அது போட்டியிடும் 48 தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டதில் இருந்தே சத்தியமூர்த்தி பவன், கலவர பவனாக காட்சியளிக்கிறது.

தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை காங்கிரசு தலைமை கேட்டுப் பெறவில்லை என்று அதிருப்தியாளர்கள் தினமும் காங்கிரசு தலைவர் சென்னிதாலாவின் படத்தை எரிப்பதும், செருப்பால் அடிப்பதும், கொடும்பாவிகள் எரிப்பதும், அதற்கு எதிராக இன்னொரு கும்பல் இதேபோல் செயல்படுவதையும் காணும் போது, காங்கிரசு கட்சிதானா? இவர்களுக்கும் தெருச் சண்டையில் மோதிக் கொள்ளும் ரவுடிகளுக்கும் என்ன வித்தியாசம்? என்று தெரியவில்லை.

இன்று ராயபுரம் மனோ கோஷ்டியும், செல்வக்குமார் கோஷ்டியும் உருட்டுக்கட்டைகள், டியூப் லைட்கள், பாட்டில்கள், செருப்புக்களையெல்லாம் கொண்டு தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் வேறு இந்த இராயபுரம் மனோ ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக செய்தி வருகிறது.அரசியலில் இருந்து கிரிமினல்களை விலக்க வேண்டும் என்று சட்டம் வந்துள்ளது. ஆனால் காங்கிரசு கட்சியில்தான் கிரிமினல்களே (அதிகாரப்பூர்வமான ரவுடிகளாக) அரசியல்வாதிகளாக வலம் வருகிறார்கள். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட கட்சிக்கு இவையெல்லாம் பெருமை சேர்க்குமா? மன்னிக்கவும், சுதந்திரப்போராட்டத்தோடு இப்போதைய காங்கிரசை இணைப்பது எந்தவிதமான நியதியும் இல்லை என்பது தெரிகிறது.

இதுபோன்ற ரவுடியிசத்திற்கு காங்கிரசுக்குள்ளேயே இருக்கும் பெரும் தலைவர்களின் ஆசியில்லாமல் இவையெல்லாம் நடைபெறாது. இத்தகைய அரசியல் ரவுடியிசத்தை அனுமதித்தால், தற்போது இவைகளை ஆதரித்து நிற்ககூடிய தலைவர்களுக்கே அது உலையாகலாம்.இவ்வாறு திறந்தவெளியில் ரவுடியிசம் செய்வதற்கு எதிராக சென்னை நகர போலீசு ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா? என்பதும் தெரியவில்லை? அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதா? என்றும் தெரியவில்லை. இதே விஷயத்தை சாதாரண மக்கள் தங்கள் தெருவுக்குள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வாய்ச்சண்டை போட்டுக் கொண்டால் அப்போது பாருங்கள் போலீசின் வீரத்தை?

சொந்தக் கட்சிக்காரர்களிடையே கூட சகோதர பாசமோ, அட குறைந்தபட்ச மனித தன்மையையோ காட்டாதவர்கள், மக்கள் மீது எப்படி அனுதாபம் காட்டுவார்கள்?தமிழக காங்கிரசு தன் ரவுடியிச கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால், தமிழக மக்கள் காங்கிரசை மிக கௌரவமாக பாடை கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

No comments: