February 26, 2009

ஒளிரும் இந்தியாவும் - ஸ்லம்டாக் மில்லினியரும்


உலகத் திரைப்பட ரசிகர்களின் உதடுகளில் செல்லமாய் தவழ்கிறது "ஸ்லம்டாக் மில்லினியர்". லாஸ் ஏஞ்சல்சில் ஆஸ்கர் அருவியில் குளித்து, உலக மக்களின் இதயங்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது "ஸ்லம்டாக்".
"ஒன் பில்லியன் பீப்பிள்" என்று வருணிக்கப்படும் இந்தியர்களால் ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு பதக்கத்தைத்தான் பெறமுடிந்தது. இது திறமைக்குறைவால் ஏற்பட்டதல்ல; ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டது.
திரைப்படத்துறையில் இந்தியர்கள் சாதனைகள் பல படைத்தாலும் "ஆஸ்கரின்" அங்கீகாரமே எவரஸ்ட் சிகரம் என்ற கனவு நனவாக்கப்பட்டுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை தனது இசைப்புலத்தால் தன்வயப்படுத்தியதன் மூலம் உலக இசைப் பிரியர்களை இந்திய இசையின் பக்கம் திருப்ப வைத்துள்ளார். எட்டாத உயரத்திற்கெல்லாம் இந்திய இசை தற்போது பயணித்துக் கொண்டுள்ளது.
நகரமயமாதலின் சுவடுகள் கூட சென்றடையாத கேரள கிராமத்திலிருந்து முளைத்தெழுந்த பூக்குட்டி இசைக்கலவையின் மகோன்னதத்தை எட்டிவிட்டார். ஆஸ்கர் என்ன அகிலமும் எட்டும் தூரத்தில்தான் என்பதை நிரூபித்துள்ளனர் ஸ்லம்டாக் குழுவினர்.
ஆஸ்கரின் மூலம் இந்தியப் பெருமை தற்போது உலகின் திக்கெட்டும் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆம்! "இந்தியா ஷைனிங்", "ஒளிருது, ஒளிருது இந்தியா..." என்று சப்புக்கொட்டியவர்களும், "2020 உலக வல்லரசு" கனவில் மூழ்கி முத்துக்களை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்தப்படம் அதிர்ச்சி வைத்தியம்தான்.
தொலைந்துபோன தனது முகத்தை இருட்டில் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் படம் எதிரொலியை கொடுத்துள்ளது.
ஆம்! ஸ்லம்டாக் மில்லினியர் அப்படி என்னத்தான் கூறிவிட்டது? எதைத்தான் காட்டிவிட்டது? என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில் படத்தை பாருங்கள்! கனவு இந்தியாவின் முகம் இதுதான். நீங்களும் விரும்பும் இந்தியாவை வடிவமைக்க செல்ல வேண்டிய தூரம் ஏராளம்... ஏராளம்...
உலகமயம் புதிய, புதிய கோட்டீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எப்படி என்ற ரகசியம் உங்களுக்கு தெரியாதா என்ன? எல்லாம் "சத்யம்" மயம். பங்குசந்தையின் ஏற்ற, இறக்கத்தில் சொர்க்கத்திற்கும் - நரகத்திற்கும் சென்றுக் கொண்டிருக்கின்றனர் உலகமய விரும்பிகள் என்றால், மீடியாக்கள் மட்டும் வேடிக்கை பார்க்குமா என்ன? அவர்களும் "குரோர்பதி", "கோட்டீஸ்வரன்" மூலம் புதிய பணக்காரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதன் ரகசியத்தைத்தான் தேடுகிறது படம்.
அமிதாப்பச்சன், அமீர்கான், கமலஹாசன், மம்முட்டி... போன்ற எந்தவொரு முன்னணி நடிகரும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள படம், உலகின் உச்சத்தைத் தொட்டிருப்பது இன்னொரு அதிசயம்.
இன்டிலிஜென்ட்ஸ், அறிவு ஜீவிகள், உயர்படிப்பு படித்தவர்கள், விக்கி பீடியாவையே தன்னுள் வைத்துக் கொண்டிருப்பவர்களால்தான் குரோர்பதி போன்ற போட்டிகளில் மிகச் சாமர்த்தியமாக தனது அறிவுத் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெறமுடியும் என்ற நிலையில், ஒரு சாதாரண "சாய் வாலா" டீ-க்கார பையன் எப்படி வெற்றி பெறுகிறான் என்பதே ரகசியம்.
மும்பை, உலக பணக்கார நகரங்களில் மிக முக்கியமானது. விண்ணளவு உயர்ந்திருக்கும், பளபளக்கும் கட்டிடங்களுக்கு மத்தியில் எலிப் பொந்துகளில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் சேரி மக்களின் வாழ்க்கையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும்தான் படம் முழுக்க விரவியிருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டில் உலகின் உச்சத்திற்கு டென்டுல்கரை உருவாக்கியிருந்தாலும், மும்பை-தாராவி குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு இடமேது. ஒரு தனியார் திடலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை காக்கி நாய்கள் குற்றவாளிகளைத் துரத்துவது போல் துரத்துகிறது. வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்பட்ட குழந்தைகள் காக்கிகளின் கைகளில் சிக்காமல் ஓடும் காட்சி சிறப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் ஓடும் பகுதிகளில் இமலயமலை அளவிற்கு உயர்ந்து நிற்கும் குப்பை மேடுகளும், காற்றுக்கூட புகமுடியாத அளவிற்கு மிக நெரிசலான தகரம் வேய்ந்த குடிசைகளும் இந்தியாவின் உண்மை முகத்தை சிறப்புடன் காட்டுவதாக உள்ளது. 60 ஆண்டு குடியரசு இந்தியா எப்படி ஒளிர்கிறது என்பதைத்தான் காணச் சகிக்கவில்லை என குமுறுகின்றனர் கனவுலகவாதிகள்.
ஒளிரும் இந்தியாவின் "நவீன கழிப்பிடம்" எப்படியிருக்கிறது என்று அற்புதமாக திரையிட்டுள்ளனர். திரைப்பட நடிகர்களின் நடிப்புகளையே தனது வாழ்வின் உச்சபட்ச கனவாக மாற்றி வைக்கப்பட்டுள்ள இந்திய மனங்கள் எப்படிப்பட்டது என்று விபரிக்கும் காட்சி நாற்றம் அடிக்க வைக்கிறது.
குடிசைகள் நிறைந்த தாராவிக்கு அமிதாப்பச்சன் ஹெலிக்காப்டரில் வருவதாகவும், இதைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் சுனாமி பேரலையைப் போல் செல்வதையும், அந்த நவீன கழிப்பறையில் மாட்டிக் கொண்ட சிறுவன் "ஜமால் மாலிக்" (கதாநாயகன்) அப்படியே மூக்கை பிடித்துக் கொண்டு மலக்குழியில் இறங்கி... அதே வேகத்தில் அமிதாப்பிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கும் காட்சி மெய்சிலிக்க வைக்கிறது.
அதேபோல் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கும் சேரிவாழ் மக்களை "மதவாதிகள்" மதக்கலவரத்தை தூண்டி எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதை உலகின் கண்களுக்கு இந்தியாவில் படரும் பாசிசத்தை அழகாக படம் பிடித்துள்ளனர். இந்த கலவரத்தில் தனது குடும்பத்தினரை பலிக்கொடுக்கின்றனர் ஜமால் மாலிக்கும், சலிம் மாலிக்கும், அவர்களுடன் இன்னொரு தாய், தந்தையரை மதவெறிக்கு பலிகொடுத்த லத்தீக்காவும் அனாதையாக்கப்படுவதும்... அவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமும் வாழ்வதற்காக போராடுவதும் மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
மதவெறியர்களால் அனாதையாக்கப்பட்ட சிறுவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக குப்பை மேடுகளில் குப்பைகளாக காலம் தள்ளுவதும், இதையும் கூட அனுமதிக்காத கிரிமினல் பேர்வழிகள் அந்தக் குழந்தைகளை கடத்தி பின்னர், அவர்களது கண்களைப் பிடுங்கி பிச்சை எடுக்க வைப்பதையும் நெஞ்சம் பதற காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் வருடத்திற்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போவது ஏன்? என்ற கேள்விக்கான விடையை ஸ்லம்டாக் மில்லினியர் கொடுக்கிறது.
இத்தகையை மனித விரோதிகளிடம் இருந்த தப்பிக்கும் நமது கதாநாயகர்கள்... பசியாலும், பட்டினியாலும் துடிப்பதும் அதைத் தொடர்ந்து வயிற்றுப் பசிக்காக ரயில்களில் உணவை திருட முற்படும்போது ரயிலில் இருந்து தூக்கியெறியப்படுவதும் என இதயத்தை ரணமாக்கும் காட்சிகள் ஏராளம். அனாதைகளாக்கப்பட்ட நாளைய மன்னர்கள் மதவாதத்திற்கும், மதவெறியர்களுக்கும் நடமாடும் சாட்சியமாக உள்ளனர்.
பின்னர் தாஜ்மஹாலை எதேச்சையாக பார்க்கும் இந்தக் குழந்தைகள் சிலவற்றை கற்றுக் கொண்டு... முன்னேறுகின்றனர். ஆனால், ஒவ்வொரு படியிலும் வில்லன்கள்....
இடையில் கைவிடப்பட்ட லத்தீக்கா பாலியல் தொழிற்கூடத்திற்கு இரையாவதும், பின் அவளைத் தேடித் திரியும் மாலிக் சகோதரர்கள் அவளை கண்டுப்பிடித்து தப்பிக்க வைப்பதும்... இவர்களுக்குள் உறைந்து கிடந்த அன்பு மேலேழுந்து வருவதும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜமால் மாலிக் இறுதிக் கட்டத்தை எட்டுவதும் ஒரு மில்லியன் பணத்திற்கு அதிபதியாவதும், இறுதிக் கேள்வி ஒன்று மீதமிருக்கையில் நிகழ்ச்சியை நடத்துபவர்களே அவனை போலீசில் சிக்கவைத்து - தீவிரவாதி என பட்டம் சூட்டுவதும்... அதனால் போலீசின் அனைத்து சித்திரவதைகளையும் ஒருங்கே அனுபவிக்கும் ஜமால் மாலிக்கின் நடிப்பு அற்புதமானது. எலக்ட்ரிக் ஷாக் வைத்து உண்மையை வரவழைக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் தனது வாழ்க்கை அனுபவத்தை கதையாக கூறுவதே ஸ்லம்டாக் மில்லினியர். இறுதியில் வெற்றியின் கதைவை தட்டுகிறான் ஜமால்.
குறிப்பாக, இந்தியாவில் ஹீரோ என்றாலே அது இந்துவாகவும், வில்லன் என்றாலே அது முஸ்லீமாகவும் காட்டப்படும். ஆனால், ஸ்லம்டாக் மில்லினியர் அனைத்துவிதத்திலும் ஒரு வித்தியாசமான கதையே!
குறிப்பாக இதற்கான திரைக்கதையை எழுதிய சைமன் பீபே பாராட்டிற்குரியவர். சிறப்பான முறையில் படத்தை இயக்கிய டேனி போயலும், லவ்லீன் டான்டனும் பாராட்டிற்குரியவர்கள்.
படத்திற்கான இசையும், ஓஹே ஜோ... பாடலுக்கான இசையையும் சிறப்புடன் வடிவமைத்த ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிற்குரியவர்.
ஒளிரும் இந்தியாவின் நிஜ முகத்தை உருவாக்கிய ஆட்சியாளர்களுக்கு நாம் என்ன பரிசளிக்கப்போகிறோம்!

February 23, 2009

என்னைக் கவர்ந்த விபச்சாரிகள்!


ரெட் லைட் ஏரியா, சிவப்பு விளக்கு பகுதி, பாங்காக் முதல் பாம்பே வரை வியாபித்து விரவிக் கிடக்கிறது. சிறு நகரம் முதல் பெரு நகரம் வரை எங்கெங்கும் வியாபித்திருக்கும் விபச்சாரம். இது யாரால் உருவானது? எப்படி உருவானது என்பதற்கு சுலபமான விடை இது சமூகத்தால் உருவாக்கப்பட்டது.


ஒரு காலத்தில் மன்னர்களின் அந்தப்புரத்தை அலங்கரித்தவர்கள். நூற்றுக்கணக்கான அந்தப்புர அழகிகளின் மயக்கத்திலேயே காலத்தை கழித்தவர்கள் மகா சக்கரவர்த்திகள். மன்னர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழியே!


இதுவே நிலப்பிரபுக்களின் காலத்தில் "கோவிலுக்கு பொட்டுக் கட்டி" ஆடவிட்டு ஆசை நாயகியாக்கியவர்கள் ஏராளம்... ஏராளம்...


காலத்தின் கோலத்தால் தகுதிக்கேற்றபடி ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதல் கடைத்தெரு வரையிலும் தகுதிக்கேற்றபடி விபச்சாரம் நடக்காமலா இருக்கிறது! இவர்களையெல்லாம் உருவாக்கியது இந்த சமூகம்தான். விபச்சாரத்தை கண்டு ஆசாரமாக முகம் சுளிப்பவர்கள், ஏளனமாய் பார்ப்பவர்கள், இருட்டிலே வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் உண்மைக் கதைகளை அறியாதவர்கள். சமூகம் இவர்களை ஒதுக்கினாலும், சமூகத்தை இவர்கள் ஒதுக்குவதில்லை. அப்படிப்பட்டவர்களின் சிலர் குறித்து எழுதுவதே இப்பதிவின் நோக்கம்.


சென்னை பூக்கடை - பிராட்வே பகுதியில் உள்ள ஆறுமுகம் தெருவை தேவடியாள் (தேவர்களின் அடியாள்) தெருவென்றே அழைப்பார்கள். மாலை நேரங்களில் மங்கும் ஒளியில்தான் இவர்களது வாழ்க்கைக்கான பயணம் ஆரம்பிக்கும்.


அடிமைப்பட்டிருந்த இந்தியாவை பிரிட்டிஷ் கழுகுகளிடம் இருந்து மீட்பதற்காக நாடு முழுவதும் மக்கள் எழுச்சிகளும், கிளர்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல. மகாத்மாவின் அந்நிய துணி எரிப்பு போராட்டம், தனிநபர் சத்தியாகிரகப் போராட்டம், உப்பு சத்தியாகிரகப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலம்.


பிரிட்டிஷ் ஏவலாளிகளான போலீசாரின் லத்திக் கம்புகள் நாள்தோறும் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தன. அடக்குமுறை அந்த அளவிற்கு இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான், 1930களில் ஜமதக்கனி என்ற காங்கிரஸ் தொண்டர் தனிநபர் துணிக்கடை மறியலை பிராட்வேயில் நடத்தினார். சும்மா விடுமா காக்கிச் சட்டை! அதுவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காக்கிச் சட்டையாச்சே! அன்றைய தினம் நாள்தோறும் ரத்தத்தை சுவைத்த லத்திக் கம்புகளுக்கு ஓய்வு கொடுத்தது காவல்துறை. அதற்கு பதிலாக வேறு ஒரு உத்தியை கடைப்பிடித்தது. எப்போதும் காவலர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஒரு பேட்டை ரவுடியை ஜமதக்கனி மீது ஏவி விட்டது.


1980க்கு முன்னால் இப்போது இருப்பது போல் வீச்சரிவாள் எல்லாம் கிடையாது. பட்டன் கத்திதான் ரொம்ப பேமஸ். போலீஸ் ஏவிய அந்த சமூக விரோத தனிநபர் துணிக்கடை மறியலில் ஈடுபட்டிருந்த ஜமதக்கனியின் மண்டையில் ஒரு பேனக் கத்தியை இறக்கி விட்டான். அவ்வளவுதான் துடி துடித்துப் போனார் ஜமதக்கனி. இரத்தம் பீறித்து அடிக்க அவர் துடித்துக் கொண்டிருந்தால்தான் என்ன, செத்துப் போனால்தான் என்ன? அவரை காப்பாற்றுவதற்கோ அல்லது மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வதற்கோ மக்கள் முன்வர பயந்தனர். அந்த அளவிற்கு பிரிட்டிஷ் கொடுமை மிகுந்திருந்த காலம். என்று


அது மட்டுமா? இப்படிப்பட்ட சுதந்திரப் பித்தர்களுக்கு யாராவது மருத்துவர்கள் வைத்தியம் பார்த்தால் அவர்களது பிழைப்பும் போய்விடும். அந்த அளவுக்கு கெடுபிடி. எப்படியோ ஜமதக்கனியின் நண்பர் ஒருவர் அவரை ரத்தம் துடி துடிக்க தூக்கிச் சென்றார் மருத்துவமனைக்கு அல்ல. தேவடியாள் தெருவிக்கு, அதான் ஆறுமுகம் தெருவுக்கு! அங்கே ஒரு வீட்டில் அவர் கதவை தட்டி உள்ளிருந்து வெளிப்பட்ட ஒரு பெண் பதறிப் போய் என்ன ஏது என்று கேட்காமல் அப்படியே அவர்களை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாழிட்டால். தன்னுடைய படுக்கையில் ஜமதக்கனியை அப்படியே படுக்க வைத்து விட்டு, அவருக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரை அழைத்து வந்தார். அந்த மருத்துவரும் மிகுந்த பயத்தோடு ஜமதக்கனியின் தலையில் சொருகப்பட்ட கத்தியை பக்குவமாக எடுத்து, மருந்திட்டு வைத்தியம் பார்த்தார். இந்த தகவல் யாருக்கும் தெரியாது. கிட்டதட்ட இரண்டு மாதக்காலம் ஜமதக்கனியை அந்த வீட்டிற்கு உள்ளே வைத்திருந்து வைத்தியம் பார்த்தார். அதுவரை அந்த பெண்ணின் முன் வாசல் கதவு யாருக்கும் திறக்கப்படவேயில்லை. வாடிக்கையாளர்கள் வருந்தினர்! என்ன ஏது என்று தெரியாமல் விழித்தனர். இருந்தாலும் கதவு திறக்கப்படவில்லை.


இரண்டு மாதம் கழித்து சுதந்திரப் பித்தர் ஜமதக்கனியின் உடல் நலம் தேறியவுடன் அந்த இதயம் உள்ள பெண்ணிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தனது இலக்கை நோக்கி பயணம் செய்யத் துவங்கினார். அந்த பெண் இவரிடம், "என்னை இப்படியே விட்டு விட்டுச் சென்றால் எப்படி? என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூற, இவரோ, நான் ஏற்கனவே தேச சுதந்திரத்தை திருமணம் செய்து விட்டேன் எனவே உங்களை மறுமணம் செய்ய முடியாது என்று கூறிவிட, "நான் என்ன செய்வது? எனக்கு ஒரு வழியைச் சொல்லுங்கள்" என்று வற்புறுத்த... ஜமதக்கனியும், நீங்களும் தேசத்திற்காக மகாத்மா கூறிய வழியில் நூல் நூற்றுக்கொண்டே வாழ்ந்து விடுங்கள் என்று கூற அதை அப்படியே ஏற்றுக் கொண்ட அந்த பெண் தனது இறுதிக்காலம் வரை மேற்கொண்டிருக்கிறார். இவரது மிக நெருங்கிய உறவினர் தமிழகத்தின் முன்னால் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்வாசலை மூடியவர் சுதந்திர வாசலை திறப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் இந்த உத்தமமான பெண்ணை யாரால் மறக்க முடியும்!


ஏறக்குறைய இதே காலகட்டம் "கீழ வெண்மணி" கதாநாயகன் என்று இன்றும் போற்றப்படுபவர் பி.எஸ்.ஆர். (பி. சீனிவாசராவ்) கர்நாடகத்திலிருந்து தாய், தந்தை, சொந்தம், பந்தம் என்று அனைத்தையும் துறந்து, கல்விச் சாலையில் படித்துக் கொண்டிருந்தபோது சுதந்திர தாகம் பெற்று அனைத்தையும் தூக்கி்யெறிந்து விட்டு அரைக்கால் சட்டையோடு - தனது ரோஜசாப் பூ நிற வண்ணத்துடன் தான் பிறந்த பிராமண குல ஆசாராங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு சுதந்திர நீரோட்டத்தில் இணைந்தார்.


ஜமதக்கனியைப் போலவே இவரும், காந்தியால் ஈர்க்கப்பட்டு சுதந்திர ஜோதியில் கலந்தவர். இவரும் 1930களில் தனிநபர் துணிக்கடை மறியலில் ஈடுபட்டார். போலீசாருக்கு மிகுந்த பரிச்சயமானவர் பி. சீனிவாசராவ். முதல் நாள் போலீசாரிடம் பழுக்க அடி வாங்கி விட்டு, மறுநாள் அதே இடத்தில் மீண்டும் மறியலில் ஈடுபட்டு மறுநாளும் லத்திக் கம்புகள் முறியம் வரை அடி வாங்குவார்... சிறை செல்வார்... இதுதான் இவரது வாடிக்கை, வழக்கம். கிட்டத்தட்ட 8 முறை இதுபோல் தனிநபர் துணிக்கடை மறியலில் ஈடுபட்டு அடி வாங்கி சிறை சென்றுள்ளார். பிராட்வே துணிக்கடையில் வியாபாரம் சூடு பிடிக்கிறது என்றால் பி.எஸ்.ஆர். அடி வாங்குகிறார் என்று அர்த்தம்.


இப்படி ஒரு நாள் மறியல் செய்து கொண்டிருக்கும் போது நாள்தோறும் தண்ணிக்காட்டும் இவனை இல்லாமல் செய்து விட்டால்தான் நமக்கு தூக்கம் பிடிக்கும் என்று தீர்மானித்து போலீஸ் புடை சூழ வருகை தந்து நொய்யப் புடைத்து விட்டனர். பி.எஸ்.ஆர். அந்த இடத்திலேயே குற்றுயிரும், குலை உயிருமாக, ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி விழுந்தார். பிரிட்டிஷ் நாய்கள் அத்துடன் விட்டதா? இவன் செத்துப் போய்விட்டான் என்று கருதி கூவம் சாக்கடையில் வீசிவிட்டுச் சென்று விட்டனர்.


மாலை நேரம் பொழுது இருள் கவ்வத் தொடங்கியது நட்சத்திரங்கள் தலைகாட்டத் தொடங்கின. யார் கண்ணிலும் படாமல் ஒரு தாய் ஓடி வந்தார், கூவத்தின் சாக்கடையோடு - ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த பி.எஸ்.ஆர்.ன் இதயத்தில் கை வைத்துப் பார்த்தார் அவரது இதயம் துடித்துக் கொண்டிருந்தது. உடனே அவரை தூக்கிச் சென்று தனது வீட்டில் வைத்து அவரை சுத்தம் செய்து, வைத்தியம் பார்த்தார். தாயின் அன்பை நினைவூட்டும் அந்த அம்மையாரின் செயலை தான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று பி.எஸ்.ஆர். கூறியிருக்கிறார். அவரும் ஒரு விலைமாதர் என்பதுதான் விதி! இருந்தாலும் என்ன? செவ்வாழை சிறு கதை எழுதி நிலப்பிரபுவின் சுரண்டல் மனப்பான்மையை படம் பிடித்த அண்ணா அவர்களின் கதையில் வரும் பெரும் நிலப்பிரபுவின் கோட்டையாக இருந்த தஞசை மண்ணை சிவப்பாக்கியவர். "அடித்தால் திருப்பி அடி", "இடுப்பில் இருக்கும் துண்டை தோளில் போடு" என்று அடிமைகளாய் இருந்த கூலி விவசாயிகளுக்கு போர்ப்பரணி கற்றுதந்த... விடுவித்த வீரனுக்கு மறுவாழ்வளித்தவர் அந்த தாய். இந்த விபச்சாரியை வரலாறுதான் மறக்குமா? பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட கைத்தடிகள் இன்றைக்கு மண்ணோடு மண்ணாய் புதைந்து போய்விட்டார்கள் ஆனால், அந்த விபச்சாரி!


அடுத்து இந்த வரிசையில் உலக இலக்கியத்தில் மங்காத இடம் பெற்றிருப்பது "யாமா". இது ஒரு ரஷ்ய விபச்சாரி குறித்த கதை. அலக்சாண்டர் குப்ரினின் புரட்சிக் கதாநாயகி. யாமா ரஷ்யாவின் புகழ்பெற்ற ரெட் லைட் ஏரியா. ஓய்வு ஒழிச்சலின்றி இயங்கிக் கொண்டிருக்கும் நகரம். சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்த யாமாவுக்குள் அடக்கம். சொல்லப்போனால் பல ஒழுக்கக்கேடுகளை தடுக்கும் மையமாக யாமா செயலாற்றியது.


இப்படியான ஒரு விபச்சார விடுதிக்கு வருகிறாள் ஒரு ரஷ்யப் பெண் (பெயர் நினைவில் இல்லை.) இவளது அழகை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. அந்த அளவிற்கு உடல் அமைப்பும், முக அழகும் ஒருங்கே பெற்றவள். புதிதாக விபச்சாரத்தில் ஈடுபட விரும்புவதாக இந்த விடுதி உரிமையாளரிடம் கூறுகிறாள். அவளும் பல கேள்விகளை கேட்கிறாள்? எதற்காக நீ விபச்சாரத்தில் ஈடுபடுகிறாய்? குடும்பத்தில் சண்டையா? அல்லது வறுமையா? அல்லது வேறு நீ ஏதாவது போலீஸ் உளவாளியா? என்றெல்லாம் கேட்கிறாள். அனணத்துக்கும் இல்லை என்று பதில் கூறும் அந்த நாயகி, "ஆண்கள் மீது மோகம்; எனவே, அதிகமான ஆண்களை அனுபவிக்க வேண்டும்" என்ற தனியாத ஆசையே காரணம் என்று கூறுகிறாள்.
இருப்பினும் இது விபச்சாரம் என்பதால் நீ இங்கே கூச்சப்படக் கூடாது என்று அறிவுரை கூறி விபச்சாரத்திற்கு பொருத்தமானவளா என்று சோதனை செய்கிறாள். அதாவது அவளது உடலில் உள்ள அனணத்து துணிகளையும் நீக்கச் சொல்கிறாள், கதாநாயகியும் எந்தவிதமான கூச்சமும் இல்லமல் அனணத்து துணிகளையும் அப்படியே அவிழ்த்துப் போடுகிறாள். பின்னர் அவளது வாழைத் தண்டு போன்ற வளவளப்பான தொடைகளையும், மார்பகத்தையும் வேறு சில இடங்களையும் கையை வைத்து அழுத்திப் பார்த்து சோதனை செய்கிறாள். பின்னர் அவள் நீ ஒரு முதல்தரமான ஆள்தான் என்று கூறி. விடுதியின் சட்ட - திட்டங்களை எல்லாம் கூறுகிறாள். இங்கே பல அசிங்கமானவர்கள் கூட வருவார்கள். ஆனால், நீ அதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறுகிறாள்... அவள் அனைத்திற்கும் சம்மதிக்கிறாள். மறுநாளிலிருந்து அன்னா மார்க்கோவா விபச்சார விடுதி புதிய களை கட்டுகிறது. வருகிற அத்துனை கஸ்டமர்களும் புதியதாக வந்தவளைத்தான் தேர்வு செய்கிறார்கள். தொடர்ந்து சில மாதங்கள் நகர்கின்றன. இருந்தாலும் அந்த விடுதியை நடத்தும் அன்னாவிற்கு ஒரே குழப்பம். வருகிறவன் எல்லாம் அவளைத்தான் தேர்வு செய்கிறார்கள். ஆனால், ஒரு முறை வந்த பிறகு பின்பு வரவே மாட்டேங்கிறார்களே அது ஏன் என்று சக விபச்சாரிகளிடம் கேட்கிறாள். அதற்கு அவர்கள், அவள் படுக்கையில் சிணுங்க மாட்டேங்கிறாள்... சரியான ஒத்துழைப்பு தர மாட்டேங்கிறாள் என்று கூறுகிறார்கள். விடுதி உரிமையாளர் அந்த நாயகியை அழைத்து விசாரிக்கிறாள். நீ போலியாக சினுங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அவள் அதற்கு நான் அப்படி செய்ய முடியாது, அப்படியெல்லாம் போலியாக நான் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாள். உடனே இருவருக்கும் வாய்த்தகராறு முற்றுகிறது. இறுதியில் விடுதி உரிமையாளரை போலீசில் மாட்டி விடுவேன் என்று கூறுகிறாள் கதாநாயகி.


"இருந்தாலும் என்ன அவள் பழம் பெருச்சாளி அல்லவா? அதெல்லாம் ஒன்றும் நடக்காது பாப்பா இங்க இருக்கிற ஜீல்லா இன்ஸ்பெக்டர் முதல் ஏட்டு அய்யா வரை நம்ம கஸ்டமர். என்னை மீறி ஒரு பயலும் எதுவும் செய்ய முடியாது" என்று ஆணவமாக கொக்கரிப்பதோடு, இனிமேல் உனக்கு பாதுகாப்பு போட வேண்டியதுதான் என்று சத்தமிட்டாள்.


இந்நிலையில், சில நாட்கள் கழித்து அந்த கிழப்பெருச்சாளி கூறிய அதே இன்ஸ்பெக்டர் பூனையைப் போல் பம்மிப் பம்மி ஒரு உயர்தர அதிகாரியுடன் வேகவேகமாக அந்த விபச்சார விடுதிக்குள் நுழைகிறார். அந்த கிழட்டு சனியனை - விடுதி உரிமையாளரை கூப்பிட்டு, அந்த கதாநாயகியின் பெயரைச் சொல்லி இந்த அம்மா இங்கே இருக்கிறாரா என்று மிகுந்த பயம் கலந்த மரியாதையோடு கேட்கிறார். அவளும் பதறிப்போய் ஆமாம் என்றுச் சொல்ல! உடனே அந்த அம்மாவை கிளம்பி வரச்சொல் என்று மிரட்டுகிறாள். அந்த விடுதி உரிமையாளரோ அவரிடம் எனக்கு சில பாக்கிகள் இருக்கிறது என்று சொல்ல! கோபமடைந்த அந்த இன்ஸ்பெக்டர் ஏ கிழட்டு சனியனே அவர் யார் தெரியுமா? நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், உன்னை உள்ளே தள்ளிவிடுவேன் என்று பயமுறுத்த... உடனே பதறிப்போய் அந்த நாயகியை அழைத்து... உதவிக்கு ஒரு ஆளையும் அனுப்பி கிளம்பச் சொல்கிறாள்.


உதவிக்கு போன பெண் அந்த நாயகியிடம் கேட்கிறாள், இப்போது புரிந்து விட்டது நீங்கள் பெரிய இடத்திலிருந்து வருகிறீர்கள். வந்திருப்பவர் உங்கள் வீட்டுக்காரரா? என்று கேட்க இல்லை என்று சொல்கிறாள்? சகோதரரா என்று கேட்க அதற்கும் இல்லை என்கிறாள்? பின்னர் அவர் என்னுடைய நண்பர் என்று மட்டும் உரைக்கிறார். அது சரி எதற்காக நீங்கள் இந்த தொழிலுக்கு வந்தீர்கள் என்று கேட்க, அதற்கு நாயகி, நான் ஒரு எழுத்தாளர் விபச்சாரம் குறித்து ஒரு புத்தகம் எழுத உள்ளேன் அதற்காக வந்தேன் என்று கூறுகிறாள். பின்னர் தயாரான நிலையில் வாசலை நோக்கி வந்தவுடன் அந்த இன்ஸ்பெக்டர் காலில் விழாத குறையாக நாயகியிடம் மிகப் பணிவாக நடந்துக் கொள்கிறார்.


சில வருடங்கள் கழிகிறது. மீண்டும் வேறு ஏதோ ஒரு வேளையாக அதே விபச்சார விடுதிக்கு வருகிறார் அந்த இன்ஸ்பெக்டர். அப்போது அந்த விடுதி உரிமையாளர் - கிழட்டு சனியன் அந்த பெண் குறித்து கேட்க, "முகம் மாறிப்போன அந்த இன்ஸ்பெக்டர், அந்த தேவடியாள் நம்மை ஏமாற்றி விட்டாள். அவளை கூப்பிட வந்தவனும் மகாராணியின் உயர் அதிகாரியில்லை. இரண்டு பேருமே புரட்சிக்காரர்களாம்? அவள் இங்கே விபச்சாரம் என்ற போர்வையில் புரட்சிக்கு ஆள் பிடித்திருக்கிறாள்" என்று மூச்சு இறைக்க கூறுகிறான். அது சரி இப்போது அவள் என்ன ஆனால்? என்று கண்களை அகல விரித்துக் கேட்க, "அவள் மன்னர் மீது குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்கு மேடைக்குப் போய்விட்டாள், அவன் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான் என்று" முடித்தான்....

l
இந்த விபச்சாரியை உங்களுக்கும் பிடித்திருக்கும்... படியுங்கள் நக்கீரன் வெளியீட்டில் வந்திருக்கும் "யாமா" என்ற புத்தகத்தை... அதன் முழுமையான இலக்கிய மற்றும் கருத்தை சுவைத்திட.
இவர்களே எனக்குப் பிடித்த விபச்சாரிகள்! இதுபோல் இன்னும் ஏராளம், ஏராளம்... விபச்சாரம் எப்படி இந்த சமூகத்தால் உருவாக்கப்படுகிறது என்பதையும் "ஏழை படும் பாட்டையும்" படிக்கலாம்!