December 02, 2005

"எய்ட்சும்" தமிழக அரசியலும்

‘எய்ட்ஸ் விழிப்புணர்வு’ எய்ட்ஸ் கிருமிகள் தொற்றுவதை தடுப்பதற்கு மட்டு மல்ல; அரசியல் விளையாட்டிற்கும் பயன்படுத்தலாம் என்பதை தமிழகஅரசியல் பிரபலங்கள் நமக்கு காட்டியுள்ளனர்.
"எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய சர்ச்சையை, எப்படி தமிழ் உணர்விற்கு கொம்பு சீவி விடும் அரசியலாக மாற்ற முடிந்தது என்ற மர்மத்தை ஆராயும் முன்னர், உலக சுகாதார நிறுவனம் எய்ட்ஸ் பற்றி கூறியதில் ஒரு சில துளியையாவது நாம் அறிவது அவசியம்.
இன்று ஏழை நாடுகளின் சாபக்கேடுகளாக இருப்பது எய்ட்ஸ்சும் - எலும்புறுக்கி நோயும். இவ்விரண்டும் சகோதர நோய்களாகும். லகளவில் எய்ட்ஸ் நோய் கிருமி தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கையில் 13 சதம் இந்தியாவின் பங்காகும். ஆசிய அளவில் கணக்கிட்டால் 62 சதவீதம் இந்தியாவில் உள்ளனர்.இந்தியாவின் தென் மாநிலங்களில்தான் (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா...) இந்திய எய்ட்ஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 80 சதவீதத்தினர் உள்ளனர்.
இம்மாநிலங்களில், ஓரின சேர்க்கை மூலமோ, போதை ஊசி மூலமோ எய்ட்ஸ் பரவுவது அபூர்வம்! ஆனால், முறை தவறிய ஆண் - பெண் பாலுறவே இந்நோய் இங்கு நடமாட முக்கிய காரணமாகும்.
காம வெறிபிடித்த பெரிய மனிதர்கள், அவர்களது வாரிசுகள், சினிமா ஹீரோக்கள், அதிகார வர்க்க பிரமுகர்கள் 18 வயதைக்கூட தாண்டாத இளம் பெண்களை ஆசை காட்டியோ, அன்பாக நடந்தோ புகழ் கிடைக்குமென்ற சபலத்தை ஊட்டியோ கசக்கி எரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் வயிற்று பிழைப்பிற்காக இப்பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்த தள்ளப்படுகின்றனர்.
இன்று பணக்கார நாடுகளில் தாயின் மூலம் குழந்தைக்கு தொற்றுவதும், மாற்றுக்குறுதி ஏற்றுவதின் மூலம் பரவுவதும் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இதற்கான மருந்துகளும், குறுதி சோதனைகளும் அங்குள்ளன. இந்தியா போன்ற ஏழை நாடுகளில்தான் இந்த மருந்துகளும், சோதனைக் கருவிகளும் எட்டாத உயரத்தில் உள்ளன. உலக வர்த்தக ஒப்பந்தங்களால், மாற்று மருந்து ஆய்வும், உற்பத்தியும் முடக்கப்பட்டுள்ளன. (கலாச்சார காப்பு அரசியல் நடத்துபவரின் மகன்தான் சுகாதார அமைச்சர் என்பதை நினைவில் கொள்வது நல்லது!)
இன்று இந்தியாவில் 7 லட்சம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து நோய் பரவுவதை தடுக்க தேவையான மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டியே நிலையிலேயே நம் அரசு உள்ளது. சுகாதாரம் தனியார்மயமானதால் இந்நோயாளிகளுக்கு அரசு மருந்துகளை வழங்குவதில்லை. தற்போது இவர்கள் எய்ட்ஸ் கிருமிகளை பரப்புபவர்களாக சீரழிகின்றனர். 30 ஆயிரம் பேர் மட்டுமே இந்த மருந்துகளை விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். மீதி ஏழைகள் நோய் பரப்பும் நடைப்பினங்களாக வாழ்கின்றனர்.
எ°ட்° விழிப்புணர்வு ஏதோ இத்தகைய நோய்ப் பற்றிய தகவல் அறிவது மட்டுமல்ல; உலக வர்த்தகத்தின் மர்மங்களையும், அரசுகளின் கொள்கைகளின் விளைவுகளையும் பற்றிய ஞானத்தையும் பெறுவதாகும். அரசியல் என்பது எய்ட்ஸ் விழிப்புணர்வோடு இந்த ஞானத்தை பரப்பும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பதென்ன!
எய்ட்ஸ் விழிப்புணர்வை ஊட்ட குஷ்பு ஏதோ கூறினார். சினிமா பிரபலங்கள் அரசியலிலே புகுந்தால் தங்களது வாக்கு வங்கி காலியாகி விடும் என்று அலரும் ராமதாசும், திருமாவளவனும் - குஷ்புவும் அரசியலில் குதிக்க முயலுகிறார் என்று பதட்டப்பட்டு "தமிழினத்தை இழிவுபடுத்திய குஷ்புவை" மாநிலத்தை விட்டோ விரட்ட வேண்டும் என்பதோடு, செருப்பு, துடைப்பம், முட்டை போன்றவற்றை காட்டி தங்களது கலாச்சார பெருமையை மீடியாக்களில் காட்டினர். இது குறித்து சுகாசினி ஏதோ கூற அதனையொட்டி கருத்துச் சுதந்திரம் காக்க சில நிருபர்கள் கூடினர். அதுவும் இவர்களின் எதிர்ப்பிற்கு இறையாக, ஆதிகால ஆரியர் - திராவிடர் சண்டை தொடர்வதாக நம்பும் தமிழின காவலரும் (கருணாநிதி) பதட்டப்பட்டார். "தமிழனுக்கு கொம்பா முளைத்திருக்கு என்ற சொற்றொடருக்கு விளக்கமளித்து போர்க்கொடியை உயர்த்தி விட்டார்." இதனால் அம்மா திமுக அளவற்ற மகிழ்ச்சியடைவதோடு, இந்தச் சண்டையால் மருத்துவமனைகளில் நடக்கும் நிர்வாக சீர்கேட்டால் எய்ட்ஸ் மருந்து கிடைக்காமையால், குறிதி சோதனை வசதி இல்லாததால் எழும் மக்களின் கோபம் திசை திரும்பியதற்காக பெரு மூச்சு விட்டுள்ளார் ஜெயா.
விளைவு என்ன? இந்த அரசியல் கலக்கலால் எய்ட்ஸ் விழிப்புணர்வு மங்கி விட்டது. அதற்கு பங்களிக்கும் ஆண் பிரபலங்கள் சமூக கண்காணிப்பிலிருந்து தப்பித்தனர்.
7 லட்சம் எய்ட்ஸ் நோய்க்கிருமியால் தாக்கப்பட்டவர்களுக்கு மருந்து கிடைக்கச் செய்யும் விழிப்புணர்வுக்கான வழி அடைக்கப்பட்டு விட்டது. எய்ட்ஸ் கிருமி கலந்த இரத்தத்தை சோதித்து அறியும் வசதி இல்லாததால் அறுவை சிகிச்சையின் போது பல குழந்தைகளும், இளைஞர்களும் எய்ட்ஸ் கிருமியால் தாக்கப்படும் வாய்ப்புகள் பெருகி விட்டன. இதுகுறித்த விழிப்புணர்வு இயக்கம் தற்போது திசை மாறி விட்டது.
இதனால், எய்ட்சும் - எலும்புறுக்கி நோயும் தமிழக அரசியலுக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கண்டு எள்ளி நகையாடினால் ஆச்சரியமடைய ஏதுவுமில்லை.
- பாண்டியன்
Guest Writer

December 01, 2005

ஐ.ஐ.டி. வெளியேறும் அறிவு!

ஐ.ஐ.டி. மாணவர் ஒருவருக்கு வெளிநாட்டு நிறுவனம் மாதம் ரூ. 36 லட்சம் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்திக் கொள்ள சம்மதித்துள்ளது. இதுமட்டுமின்றி 150 பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஆண்டு இந்திய ஐ.ஐ.டி.க்களில் “கேம்ப° இன்டர்வியூ - கேம்ப° பிளே°மெண்ட்” செய்வதற்கு விண்ணப்பித்துள்ளன. இதில் 50 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தினமணியில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

உலகளவில் கல்வித்துறையில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது இந்திய ஐ.ஐ.டி.க்கள். இந்திய அரசு உயர் தொழில்நுட்பத்திற்காக இந்திய நாடு முழுவதிலும் 7 ஐ.ஐ.டி.க்களை 1950களில் உருவாக்கியது. இத்தகைய ஐ.ஐ.டி.க்களில் படித்து வெளிவரும் மாணவர்கள் விஞ்ஞானிகளாகவும், சிறந்த கல்வியாளர்களாகவும், நிர்வாகிகளாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் வெளி வருகின்றனர்.இத்தகைய திறமை வாய்ந்த மாணவர்களை இந்திய அரசும் - மாநில அரசுகளும் பயன்படுத்திக் கொள்கிறதா? என்றால் அதுதான் இல்லை! உண்மையில் நம்முடைய மக்கள் பணத்தில் பெரும் தொகை இத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. (சாதாரண அடிப்படை கல்விக்கு ஒதுக்கப்படுவதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.) அதுமட்டுமின்றி ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் மிகதரமான கல்வியை பெறுகின்றனர். இத்தகைய மாணவர்கள் தங்களது கல்வியை முடிக்கும் தருவாயில் வெளிநாட்டு நிறுவனங்கள் கழுகுப்பார்வையாக கொத்திக் கொண்டு செல்கின்றன.

குறிப்பாக ஐ.ஐ.டி. மாணவர்கள் 25,000க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். உலகம் முழுவதிலும் பல லட்சம் இந்திய அறிவாளிகள் வெளி நாடுகளில் நமது அறிவை விற்றுக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான வாய்ப்பை நமது இந்திய ஆட்சியாளர்கள்தான் உருவாக்கித் தர வேண்டும்! இதற்கான குற்றவாளிகள் நமது ஆட்சியாளர்களே தவிர இந்த மாணவர்கள் இல்லை!

ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் = நூறு கோடி) மதிப்பு இந்திய அறிவு வெளியேற்றப்படுவதாக “2001ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு மனிதவள மேம்பாட்டு” அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தற்போது இம்மதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்கும். இதிலிருந்தே நம்முடைய இந்திய அறிவுச் செல்வம் எவ்வளவு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொள்ளை போகிறது என்பதை அறியலாம்.

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -
கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!”

மகாகவி பாரதியின் கனவு இங்கே தகர்க்கப்படுகிறது.



இந்திய நாட்டில் பணிபுரியும் நேர்மையான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறதா என்பதை பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒரு உதாரணம்:‘கான்பூர் ஐ.ஐ.டி.யில் பயின்ற ஏழை மாணவன் சத்தியேந்தர் துபே - தங்க நாற்கர சாலை அமைக்கும் பணியில் அதிகாரியாக பணி புரிந்த போது, காண்ட்டிராக்டர்களின் கொள்ளைகயைம், ஊழல்களையும் அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தை ரகசியமாக வைக்கும்படியும் வலியுறுத்தப்பட்டிருந்தது. நிலைமை என்னவென்றால் பிரதமர் அலுவலக்ததில் இருந்தே இக்கடிதம் காண்ட்டிராக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சத்தியேந்தர் துபே காண்ட்டிராக்ட் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார்” இதுதான் நேர்மையான அதிகாரிகளுக்கும் - சிறந்த மாணவர்களுக்கும் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட அங்கீகாரம். இவர்கள் இந்துக்களின் மேன்மையான ஆட்சியைக் கொண்டுவரப்போவதாக கூறுவது “காண்ட்டிராக்ட் கொள்ளையர்களின் - பெரு முதலாளிகளின் ஆட்சிதான்” என்பதை நிருபித்துள்ளனர்.

இந்த படுகொலையைக் கண்டித்து ஐ.ஐ.டி. மாணவர்கள் சத்தியேந்தர் துபே பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.skdubeyfoundation.org/index.php

மது மத்திய - மாநில ஆட்சியாளர்களின் கல்விக் கொள்கை பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவை செய்வதே தவிர வேறில்லை! நமது அறிவுச் செல்வத்தை பயன்படுத்திட தேவை சமூக மாற்றம்! இந்திய நாட்டில் உள்ள மென்பொருள் வல்லுனர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநனர்களை நமது நாட்டில் பயன்படுத்தினால் இந்திய நாட்டின் முன்னேற்றம் எட்டாத தொலைவில் நிற்கும். இதை யார் செய்வது? தேவை மாற்றம்! நல்ல சமூகம் உருவாக்கிட சங்கமிப்போம்!