October 24, 2008

இல. கணேசனின் இந்துத்துவம் பாசிசமே!



பா.ஜ.க. தலைவர் இல. கணேசன் "பரந்த மனப்பான்மையே இந்துத்துவம்" என்ற தலைப்பில் தினமணியில் எழுதியுள்ள கட்டுரை பொய்யிலே வளர்ந்து பொய்யிலே பிறந்த புலவர் பெருமானே என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இவர்கள் எப்போதும் தங்களை கோயபல்சின் சிஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்கள் அல்லவா? 


அதனால்தான் மேற்கண்ட கட்டுரையில் இந்துத்துவா மனப்பான்மை குறித்து விளக்கப் புகுந்த இல. கணேசன் அதன் உண்மை சொரூபத்தை விளக்குவதை பாருங்கள். குறிப்பாக சகிப்புத்தன்மை குறித்து அவர் இவ்வாறு கூறுகிறார். 


"இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை."


இந்துத்துவம் சகிப்புதன்மையற்றது என்று ஒப்புக் கொள்ளும் இல. கணேசன் அதற்கு மாற்றக மனிதநேயம்தான் இந்துத்துவாவின் உயர்ந்த பண்பு என்று கூறுகிறார். அது குறித்து அவர் எழுதியதையும் நோக்குவோம்.


"மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான்.

எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை."


இப்படி மனித நேயத்தின் உயர்ந்த வடிவமாக இந்துத்துவாவைக் காட்டுக் கொள்ள முனையும் இல. கணேசன் தத்துவமும் - நடைமுறையும் உண்மையிலேயே மனித தன்மையுடன் இயங்கக் கூடியதா? என்ற கேள்வியை முன்வைத்தால் வாசகர்கள் இதற்காக எந்தவிதமான ஆராய்ச்சியும் செய்யாமல் அதற்கு மிருக நேயம் மட்டுமே உண்டு என்று பதிலளிப்பார்கள். காட்டுமிராண்டித்தனத்தின் மறு வடிவமே இந்துத்துவம் என்று பதிலுரைப்பதைக் காண முடியும். இதற்குள் இப்போது விரிவாக புக வேண்டாம். பின்பு இது குறித்து பார்க்கலாம்.


மனித நேயத்தை இந்துத்துவத்தின் புனித மான்பாக உருவகப்படுத்த முனைந்த இல. கணேசன் அப்படியே தங்களது இந்துத்துவ அஜண்டாவிற்கு மாறி மதமாற்றம் குறித்த தங்களது அரசியல் விவாதத்தை பக்குவமாக முன்வைப்பதைப் பாருங்கள். 


"நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது.

மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை."


 இந்த விவாதத்தின் இறுதியில் அவர் மதமாற்றத்தை எதிர்க்கும் ஒரிசா பாணியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுவதையும் அவரது வரிகளில் ஒளிந்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை காண முடியும்.


"மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்?

எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்."

இல. கணேசனின் இந்துத்துவ பரந்த மனப்பான்மை எது என்தை மிக அழகாக வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் ஏற்றியுள்ளார். மேற்குறித்த அவரது கருத்துக்களில் எந்த அளவிற்கு உண்மை பொதிந்துள்ளது என்று ஆராய வேண்டியுள்ளது. ஆராய்வது நமது பண்பாடுகளில் ஒன்று.

முதலில், இந்துத்துவம் என்ற வார்த்தைக்கான பொருள் குறித்து இல. கணேசன் கூறுவதற்கும், ஆர்.எஸ்.எஸ்.சின் ஸ்தாபகர் சவர்க்கர் கூறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்ப்போம்! இதில் எது உண்மை, எது அவர்களின் உண்மையான சித்தாந்த அடித்தளம், அது எதை உணர்த்துகிறது, அதன் மூலம் அவர்கள் இந்த நாட்டில் என்ன சாதிக்க விரும்புகிறார்கள் என்பதை பார்ப்போம்!

சவர்க்கரின், இந்துத்துவா என்ற புத்தகத்தில் அவர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

"இந்து என்பவர் சிந்து நதியிலிருந்து கடல் வரை நீண்டிருக்கும் பிரதேசமாகிய பாரதவர்ஷத்தை தன் தந்தையர் நாடாகவும், புனித பூமியாகவும் அதாவது தன் மதத்தின் தொட்டிலாகவும் கருதுகின்ற நபர். இதுதான் இந்துத்துவாவின் உண்மையான சாரம்சம் என்று கூறுகிறார்."


இல. கணசேன் என்ன சொல்கிறார். "ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை."


ஆர்.எஸ்.எஸ்.சின் பைபிள் என்றும் குரான் என்றும் பகவத் கீதை என்றும் கூறுப்படுவது இந்துத்துவா என்ற புத்தகம்தான். அதுதான் இந்த பாசிஸ்ட்டுகளின் மூல நூல் - தத்துவ வழிகாட்டி. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இவர்கள் தங்களது செயல்திட்டத்தை வகுத்துள்ளனர். அதனால்தான் சவர்க்கார் மிகத் தெளிவாகக் கூறுகிறார். இந்த நாடு - மன்னிக்கவும் இந்த நாடு என்று கூறும் போது நீங்கள் இந்தியா என்று நினைக்கக் கூடாது. அகண்ட பாரதம் அது ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கியது. இதுதான் அவர்களின் ஒரே கனவு. இந்த பாரத வர்ஷத்தைத்தான் அவர்கள் பித்ரு பூமி என்று வருணிக்கின்றனர். அதாவது தந்தையர் நாடு. பாரதவர்ஷத்தில் உள்ள யாராவது தப்பித் தவறி இதனை பூமாதேவி - தாய் பூமி என்றெல்லாம் வருணித்தால் அவர்கள் இந்துவே அல்ல - அதாவது இந்துத்துவாவின் பரம எதிரி. இந்துத்துவா கோட்பாட்டின் அடி நாதமே ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் இவர்கள் தாய் நாடு என்று அழைப்பதில்லை. தந்தையர் நாடு என்று அழைக்கின்றனர். ஜெர்மனியில் நாஜீ இனவெறியன்கூட தனது நாட்டை தந்தையர் நாடு என்றுதான் அழைத்தான். அவனிடம் இருந்து கடன் வாங்கப்பட்ட கொள்கையாதலால்தான் இதனை தந்தையர் நாடு என்று அழைக்கின்றனர். அதனால்தான் இவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வதில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்துவாவில் பெண்களுக்கு இடமில்லை. பெண்கள் இதில் ஏதாவது உரிமைக் கோரினால் அவர்களுக்கு இந்த பித்ரு பூமியில் இடமில்லை. இதுதான் இந்துத்துவாவின் உயர்ந்த மனிதாபிமானம். இதனைத்தான் இல. கணேசன் தங்களுக்கு சகிப்புத்தன்மை என்றாலே சகிக்காது என்று உரைக்கிறார்.

அடுத்து பாரதவர்ஷத்தில் யாருக்கு இடம் உண்டு. இதனை புண்ணிய பூமியாக கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளாதவர்கள் இந்துத்துவாவின் எதிரிகள். இங்கே பாவப்பட்டவர்களுக்கு இடம் இல்லை. பாவ மன்னிப்பு தரக்கூடிய அமைப்பல்ல இந்துத்துவா! இந்தியாவில் பிறந்து - இந்தியாவில் வளர்ந்து பார்ப்பனீயத்தால் சித்தாந்தத்தால் அடிமைகளாக்கப்பட்ட 25 தலித்துக்கள் - தீண்டாதவர்கள் - பார்க்கக்கூடாதவர்கள் - தொடக்கூடாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டு - ஒழிக்கப்பட்ட அந்த தலித் மக்கள் வாய் பேசாதவர்களாக - ஊமைகளாக இந்த புண்ணிய பூமியில் இந்துக்களாகவே வாழ்ந்து - இந்துத்துக்களாகவே மடிய வேண்டும். செத்துப் போன மாட்டுக்கறிகளையும், புளித்துப் போன உணவையும் உட்கொண்டு இந்துக்களாகவே வாழ வேண்டும். யாருக்காவது தன்மானம் என்று வந்து கிருத்துவர்களாகவோ? இசுலாமியர்களாகவோ மதம் தங்கள் மானம் காப்பதற்காக மதம் மாறினால் அவர்கள் இந்துத்துவாவின் எதிரிகள். நாங்கள் கோவிலுக்குள் விட மாட்டோம். சம மனிதனாக நடத்த மாட்டோம் இருந்தாலும் நீ இதனை புன்னிய பூமியாக கருத வேண்டும். இந்த மதத்திற்கு உள்ளேயே நீ கட்டுண்டு கிடக்க வேண்டும். இதுதான் உனக்கு மனு நீதி வழங்கிய நீதி என்று போதிக்கிறது இந்துத்துவா பைபிள்.

ஒரு விசயத்தை இங்கே உறுதியாக சொல்ல வேண்டும். இந்துத்துவாவிற்கு எதிரி கிருத்துவமும் - இசுலாமும் மட்டுமல்ல. பெளத்தமும் - சமணமும் கூட. இந்தியாவில் தோன்றிய இந்த சிந்தனைகளால் கோடிக்கணக்கான தலித்துக்கள் வளமும் - பலமும் பெற்றார்கள் என்பதற்காகவே இந்த மதத்தை பார்ப்பனீய சித்தாந்தத்தின் கீழ் கொண்டு ஒழித்து விட்டவர்கள் அல்லவா? இந்த மண்ணில் கிருத்துவத்திற்கும் - இசுலாமுக்கும் இடம் கொடுத்தார்களாம் இப்படி உரைக்கிறார் இல. கணேசன். பெளத்தத்தையும் - சமணத்தையும் இந்த மண்ணில் இருந்து பிடிங்கியவர்கள் கிருத்துவர்களா? இசுலாமியர்களா? அல்லவே இந்துத்துவவாதிகள்தானே - பார்ப்பனீய சனாதனத் தத்துவம்தானே இவர்களை வீழ்த்தியது. அதுவும் சதி செய்தல்லவா வீழ்த்தியது. இந்த பன்முகப்பட்ட ஜனநாயகம்தான் இந்துத்துவம் என்று உரைக்கிறார் சவர்க்கார்.


இறுதியாக சவர்க்கரின் கூற்றுப்படி இந்தியாவை - மன்னிக்கவும் பாரதவர்ஷத்தை தாய்நாடு என்று அழைப்பவர்கள் இந்துத்துவத்தின் எதிரிகள். வேற்று மதத்தை தழுவியவர்கள் இந்துத்துவத்தின் எதிரிகள். கிருத்துவமும் - இசுலாமும் இந்தியாவில் தோன்றாததால் அது இயல்பாகவே எதிரியாகிறது இந்துத்துவாவிற்கு. மொத்தத்தில் இந்துத்துவ மண்ணில் பெண்கள் உட்பட மேற்கண்ட யாருவக்கும் இடம் இல்லை. ஏன் ஜனநாயகம் - மதச்சார்பின்மை போன்ற தத்துவங்கள் கூட ஐரோப்பாவில் தோன்றிய கோட்பாடுகள் என்பதால் அவையும் எதிரிகளே!

அடுத்து, இல. கணசேனின் இந்துத்துவம் ஏதோ மனித நேயத்தின் உச்ச கட்டம் என்பதுபோல் புகழ்ந்துரைத்திருக்கிறார். இந்த இந்துத்துவ புனிதர்கள் இந்தியாவில் செய்து வரும் அட்டகாசத்தை - பாசிச வெறித்தனத்தை யாரும் சொல்ல வேண்டியதில்லை. ஒரிசா முதல் கருநாடகம் வரை கிருத்துவர்கள் மீது தாக்குதல் - தேவாலயங்கள் எதிரிப்பு - கிருத்துவ கடவுள் சிலைகள் உடைப்பு - ஏன் ஒரிசாவில் கன்னியாஸ்திரிகளை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இட்டுச் சென்று கற்பழித்தார்களே அதுதான் இந்துத்துவாவின் உயர்ந்த மனித பண்பு. ஏற்கனவே அஸ்திரேலிய பாதிரியாரையும் - அவரது மகனையும் உயிரோடு கொளுத்தியவர்கள் மனிதப் புனிதர்களாம். குஜராத் மோடித்துவா பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அந்த மோடியை ஏகாதிபத்திய அமெரிக்கா கூட உள்ளே விட மாட்டேன் என்கிறது. நவீன ஹீட்லரின் வாரிசாக மோடி காட்சியளிக்கிறார். குஜராத்தில் 3000 இசுலாமியர்களை நர வேட்டையாடி - கர்ப்பிணி பெண்களையும் - சிசுவையும் கூட எரித்தவர்கள் அல்லவா? இவையெல்லாம் கூட இந்த இந்துத்துவாவின் மகத்துவம்தான். அதாவது இந்துத்துவா தர்மம். ஏதோ இந்துத்துவா என்பது ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் தத்துவம் போல இல. கணசேன் தனது வாதிடுகிறார். மொத்தத்தில் இவரது மனித நேயம் என்பது பாசிசமே! இந்துத்துவம் என்பது இந்தியாவின் எதிரி! இந்துத்துவ அமைப்புகள் என்பது இந்திய மக்கள் ஒற்றுமையை சூறையாடும் சுனாமி.

இறுதியாக மதம் மாற்றம் குறித்து பேசும் இல. கணேசன். ஏதோ மதம் மாறுவது குற்றம் இல்லையாம்? தவறு இல்லையாம்? ஆனால் பண்பாடு மாறக் கூடாதாம்! எந்த பண்பாடு மாறக்கூடாது? எங்கிருந்து வந்தது இந்த பண்பாடு என்பதுதான் நமது கேள்வி? மனு நீதியின் பெயராலும் - பார்ப்பனீயத்தின் பெயராலும் - நிலப்பிரத்துவ சித்தாந்தத்தின் பெயராலும் திணிக்கப்பட்ட மனிதனை மனிதன் வெறுத்து ஒதுக்கும் - இந்த பண்பாடு போற்றுதலுக்கு உரியதாம். மனித நேயத்தை வலியுறுத்தப் புகுந்த இல. கணேசன் மதமாற்றத்தை புகுத்துகிறார். அடிப்படையாகவே ஒரு கேள்வி எழுகிறது மனித நேயம் என்று வந்து விட்டால் அங்கே மதத்திற்கு இடமேயில்லை. அப்புறம் எதற்காக பண்பாடு என்று ஒரு முகமூடிப் போட்டுக் கொண்டு தாக்குகிறார். இன்றைய இந்து மதம் எப்போது வந்தது? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் கொடுத்த பட்டம்தானே இந்து? இந்து மதத்திற்கான விளக்கத்தையாவது உருப்படியாக இதுவரை கொடுத்துள்ளார்களா? இல்லையே? அப்புறம் என்ன இந்து மதம்? இந்துத்துவா என்ற சனாதன கொள்கையை அமலாக்குதற்கும் - தங்களது மதவெறி அரசியல் மூலம் ஆட்சியைப் பிடிப்பதற்கும் கோடிக்காண மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்த இந்து என்ற வார்த்தையை தனது அரசியல் தாயமாக போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறது சங்பரிவாரம். இங்கே இந்துத்துவா என்றால் என்ன அர்த்தம் என்றால்? இந்து மதம் அல்ல; அந்த இந்து மதத்தை பயன்படுத்தி மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பா.ஜ.க., பஜ்ரங் தள் என்று பொருள்! எனவே இந்துத்துவா என்பது மனித நேயம் அல்ல மதவெறிப் பாசிசம் என்பதை வேகமாக உரைக்க வேண்டியுள்ளது.

7 comments:

Anonymous said...

இல.கணேசன் எடுப்பது அரசியால் வாந்தி அந்த வாந்தியை நீவிர் உண்டு விட்டு எடுப்பது so called சோஷலிச வாந்தி. மொத்ததில் எல்லாமே அரசியல்வா(ந்)திகள்.

-நானார்

Robin said...

கையில் ஆயுதங்களோடு கலவரம் என்ற பெயரில் வெறியோடு அப்பாவிகளை கொள்ளுவதுகூட பண்பாடுதானா? ஒரிசாவிலும் குஜராத்திலும் இந்த காவிக்கும்பல் போட்ட கொலைவெறியாட்டத்தை யாரால் மறக்கமுடியும்.

Anonymous said...

இல.கணேசன் போன்றவர்கள் இப்படியெல்லாம் பேசினால், அல்லது எழுதினால்தான் அவர்கள் இந்துத்துவ பாசிச குணத்திற்கு உண்மையானவர்களாக நடந்து கொண்டதாக அர்த்தம். அதன் ஆபத்தைக் குறைத்து மதிப்பிடும் நானார் போன்றவர்களின் (செல்வப்பெருமாளின் கட்டுரைக்குப் பதிலிறுத்துள்ளவர்) மனோவியல் தான் இந்துத்துவ விளைச்சல்களுக்கு மிகச் சிறந்த உரமாகும். இந்துத்துவ வாதிகள் இந்துத்துவ வாதிகளாக இருக்கிறார்கள் என்று கண்டு, விண்டுரைப்பதல்ல பிரச்சனை. அதை எவ்வாறு சகல தளங்களிலும் எதிர்கொள்ளப் போகிறோம் என்பதும், எதிர் கொண்டு முறியடிக்கப் போகிறோம் என்பதுமே இந்திய சமூகத்தின் சமூக, கலை, அரசியல், பண்பாடு அனைத்துத் தளங்களிலுமுள்ள உண்மையான பிரச்சனையாகும்.
-அன்புடன்,
ஸ்ரீரசா

சந்திப்பு said...

அனானி அன்பு நானார் அவர்களே.

நீங்கள் அரசியல் அற்ற பிராணி என்று சொல்ல முடியுமா? மனிதன் என்பவரே ஒரு பொலிட்டிக்கல் அனிமல்தான். நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் அரசியல் உங்களை விடாது. அதனுடன்தான் நீங்கள் வாழ வேண்டும். இதில் எந்த அரசியல் உங்களைப் போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு பயன்படும் என்பதுதான் எங்களுடைய கவலை. இதில் மதவாத அரசியல் மனிதனின் நிம்மதியைக் கெடுப்பது. சோசலிச அரசியல் மனிதனை மனிதனாக மதிப்பது. சமமாக கருதுவது. சம வாய்ப்புகளை வழங்குவது என்று பொருள். இனிமேல் நீங்கள் எந்தப் பக்கம் போகலாம் என்று முடிவு செய்துக் கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்கு நன்றிகள்.

சந்திப்பு said...

அன்புன்ன ராபின் மிகச் சரியாக கேட்டுள்ளீர்கள். இவர்கள் பண்பாடு என்பது மதவெறி ஆயுதமே! அதற்காக இவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இவர்களுக்கு ஷாகாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களிடம் உள்ள மதவெறி ஆயுதத்தை அரசியல் ரீதியாக சந்தித்து பிடுங்க வேண்டியுள்ளது. இது சமூகத்தின் கடமை.

சந்திப்பு said...

அன்புள்ள ஸ்ரீ ரசா மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். பிரச்சனையை விளக்குவதல்ல நமது கடமை. இதனை எப்படி எதிர்கொள்வது. மாற்றுவது என்பதுதான். அதற்காகத்தான் இவர்களது தகிடு தத்தங்களை அடிக்கடி உரைக்க வேண்டியுள்ளது. அழுத்தமாக உரைக்க வேண்டியுள்ளது. இவர்களை முறியடிக்கும் வரை இவர்களது இழி செயல்களை மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டியது கடமையாகிறது.

Anonymous said...

இல.கணேசன் அவர்களின் தத்துவார்த்த புரட்டுகளை எம் போன்ற வாசகர்களுக்கு புரிய வைக்கும் கருத்து செரிவுள்ள கட்டுரை. நான் அறிந்திராத, RSSல் பெண் உறுப்பினர் இல்லை என்பது போனஸ் செய்தி. மேலும் பல விமர்சன கட்டுரைகளை எதிர்பார்த்து

நா.நாராயணன்.