March 08, 2008

செஞ்சுரி காணும் வைக்கம் முகம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீர் கேரள இலக்கிய உலகின் பிதாமகன். வடக்குத் திருவாங்கூர், வைக்கத்தில் உள்ள தலையோலப்பறம்புவில் ஜனவரி 21, 1908 அன்று பிறந்தார் பஷீர். தற்போது, அவரது நூற்றாண்டு விழா கேரளாவில் மட்டுமல்ல; நாடு முழுவதும் சிறப்போடு நினைவுகூறப்படுகிறது. தமிழ் இலக்கியத்திற்கு பஷீர் புதியவரல்ல; அவரது சிறுகதைகள் மற்றும் நாவல்களில் பெரும் பகுதி மொழிபெயர்க்கப்பட்டு தமிழுக்கும் சிறப்பு சேர்த்துள்ளது.
பஷீரின் படைப்புகள் எதார்த்தவாத இலக்கியத்தை தாங்கி நிற்கும் மாபெரும் தூண்கள். அவரது படைப்புகள் அனைத்திலும் அவரது வாழ்க்கை நீரோட்டமும் இரண்டற கலந்தே இருக்கும். கேரள மக்களை வசீகரிக்கும் இலக்கிய நாயகனாக பஷீர் வீற்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.பஷீரின் எழுத்துக்கள் சுவீகரிக்கும் தன்மைக் கொண்டது. பல புதிய இளம் எழுத்தாளர்களுக்கு இவரது எழுத்துத்தன்மை ஒரு அட்சயப்பாத்திரம். பஷீரின் எழுத்துக்களில் பெரும் பாண்டித்தியமோ, மேதமையோ, அழகியல் மற்றும் சித்தாந்த போக்குகளோ அல்லது மேல் பூச்சு வேலைகளோ எதுவும் இருக்காது. அது தான்வாழ்ந்த கேரள மண்ணின், எளிய மக்களின் மொழியை பேசும் காவியமாக - இலக்கியமாக, அவர்களின் வாழ்க்கை சித்திரத்தை சொல்லோவியமாக அப்படியே படம் பிடித்துக் காட்டியது. இலக்கியம் என்று சொன்னாலே ‘ஷேக்ஷ்பியர் மாதிரி இருக்க வேண்டும் என்பதல்ல; பஷீர் மாதிரி இருந்தாலே போதும்’ என்ற நம்பிக்கையை விதைத்தவரே இந்த வைக்கம் வீரர்!
மரவியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பஷீரின் தந்தைக்கு பெரிய குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருந்தது. ஒரு கட்டத்தில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட இன்னல்களுக்கு உள்ளானது குடும்பம். ஆரம்ப கல்வியில் பயின்று வந்த பஷீரின் மனம் இளம் வயதிலேயே சுதந்திரத்தின் மீது காதல் கொண்டது. காந்தியம் எனும் காந்தத்தின் ஈர்ப்பால் கவரப்பட்ட பஷீர் கதராடைகளை அணியத் துவங்கி பொதுவாழ்வில் தன்னுடைய இன்னிங்சை துவக்கினார்.
1924இல் வைக்கம் சத்தியாகிரகதிற்கு காந்தியார் வந்தபோது, அவரைப் பார்க்க வேண்டும் என்ற அவாவில், அவரது காருக்குப் பின்னால் ஓடிச்சென்று காந்தியின் கையை தொட்டு விட்ட சந்தோஷம் மின்சாரமாய் பாய்ந்து பஷீரை இயக்கிக் கொண்டே இருந்தது; ஒரு சுதந்திரப் போராளியாய் - மக்களை நேசிக்கும் மாண்புகளைக் கொண்ட மனிதமாய்.
இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்ட பஷீர் 1930இல் கோழிக்கோடில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெறச் சென்றபோது கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்று கண்ணணூர் சிறையிலிருந்த போது ‘பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின்’ வீராவேச நிகழ்வுகள் மேலும் மின்சாரத்தை வலுவாகப் பாயச்சி சுதந்திரக் கனலை எழுச்சிக் கொள்ளச் செய்தது.
பின்னர் விடுதலையான பஷீர், பரவலான மக்கள் மத்தியில் தீவிர சுதந்திர வேள்வியை கொண்டுச் செல்ல ‘உஜ்ஜீவனம்’ (எழுச்சி) என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். இதற்காக இவர் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளத்திலிருந்து வெளியேறிய பஷீர், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றியலைந்தார். தன்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக பல்வேறு பணிகளை மனமுவந்து செய்தார். பழவியாபாரி, செய்தித்தாள் விற்பனையாளர், பிட்டர், வாட்ச்மேன், அக்கவுண்டண்ட், மாடு மேய்ப்பது, ஹோட்டல் தொழிலாளி என அவர் செய்யாத வேலையே இல்லை என்ற அளவிற்கு அவரது பணிகள் அமைந்தது.
அதே காலத்தில், இமயமலை அடிவாரத்திலிருந்த சூஃபி சன்னியாசிகளோடு தங்கியிருந்து, சூஃபியிசத்தின்பால் மனதை பறிகொடுத்தார். பல்வேறு இடங்களில் சுற்றியலைந்து, பின் 1936 வாக்கில் சொந்த ஊருக்குத் திரும்பிய பஷீர், தன் குடும்பம் மிக வறிய நிலையில் இருப்பதைக் கண்டு வருந்தினார். குடும்பத்தினரோடு தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் துவங்கிய பஷீர் பல்வேறு வேலைகளை செய்தார். பின் ‘ஜெயகேசரி’ என்ற பத்திரிகையில் சேர்ந்தார். அங்கு சில காலம் பணிபுரிந்த சமயத்தில்தான் இவரது முதல் படைப்பான ‘தங்கம்’ என்று சிறுகதை வெளியானது. தங்கத்தில் துவங்கிய இவரது படைப்புகள் நாட்பட நாட்பட மிகுந்த ஜொலிப்புடன் கூடிய வைரமாக மிளிர்ந்தது.
முழுநேர எழுத்தாளராக மலர்ந்த பஷீர், பல்வேறு படைப்புகளை மலையாள இலக்கிய உலகிற்கு அளித்தார். குறிப்பாக ‘பாத்துமாவின் ஆடு’, ‘இளம் பருவத்து தோழி’, ‘மதிலுகள்’, ‘உலகப் புகழ்மிகு மூக்கு’, ‘மதிலுகள்’, ‘சப்தங்கள்’, ‘எங்கள் தாத்தாவுக்கொரு யானை இருந்தது’, ‘மந்திர பூணை’, ‘ஜென்ம தினம்’ போன்ற இவரது பல்வேறு படைப்புகள் கேரள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆரம்ப காலத்தில் இவரது படைப்புகளை இவரே தெருத்தெருவாகவும், பேருந்து நிலையங்களுக்கும் எடுத்துச் சென்று தானே கூவி விற்று வந்தார். சில நேரங்களில் பேருந்து நிலையத்தில் ஒருவரிடம் விற்ற கதைகளை அவர் படித்து முடிக்கும் வரை காத்திருந்து, பின்பு அவரிடம் பேசி அந்த புத்தகத்தை பெற்று வேறு ஒருவருக்கு விற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இப்படித்தான் இவரது எழுத்துக்கள் கேரள மக்கள் மத்தியில் வேரூன்ற ஆரம்பித்தது.
பொதுவாக நாவல் என்று சொன்னாலே அது தலையணை அளவிற்கு பெரியதாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உடைத்தவர் பஷீர். இவரது பெரிய நாவல்கள் கூட 80 பக்கத்திற்கு மிகாது. உதாரணமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘பண்டமரா’ போல்; அளவில் சிறியதாக இருப்பினும் கீர்த்தியில் பெரியதாக இருக்கும். 1941-42இல் இவரது இரண்டு படைப்புகளுக்காக திருவாங்கூர் அரசு இவரை சிறையில் அடைத்தது. இவரது வீடும் சோதனையிடப்படடது. எழுதியதற்காக சிறையில் அடைத்தவர்கள், இவரது எழுத்தை சிறையில் பூட்ட முடியவில்லை.
பஷீரின் புகழ்மிகு படைப்பான ‘பாத்தும்மாவின் ஆடு’ இவரது வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகும். பெரிய கூட்டுக்குடும்பத்தில் நேரும் பல்வேறு இன்னல்களை இதில் மிக அழகாக படம் பிடித்திருப்பார். குறிப்பாக பஷீரின் தங்கையான ‘பாத்துமா’வின் ஆடு அந்த வீட்டில் செய்யும் அட்டகாசத்திற்கு அளவேயிருக்காது. இருப்பினும் அந்த ஆட்டை அனைவரும் நேசித்தனர். ‘பாத்துமாவின்’ துன்பங்களுக்கு விடிவே அந்த ஆடுதான்; இந்த ஆட்டை மையமாக வைத்து படைக்கப்பட்ட இந்நாவல் மிகவும் சுவையூட்டக்கூடியதாக இருக்கும். அந்த ஆடு வீட்டில் உள்ள இலை, தழைகளை மட்டுமல்ல; குழந்தைகளின் சாப்பாட்டைக்கூட தின்று விடும், அது மட்டுமா? பஷீரின் சில நாவல்களும் அதன் பசிக்கு சுவையாகியிருப்பதை அழகாக படம் பிடித்திருப்பார். குடும்ப வறுமையால் பஷீருக்கு வரும் சொற்ப பணம் கூட, சில மணித்துளிகளில் எவ்வாறு பறந்து போகிறது என்பதையும், இதில் வெறுத்துப்போன பஷீர் பாத்துமாவின் ஆட்டுக்குகூட ஒரு பத்து ரூபாய் நோட்டை தின்பதற்கு கொடுக்கும் காட்சி நெகிழ வைக்கிறது. பஷீரின் தங்கைகள் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் வைக்கும் கோரிக்கைகள், அதில் ஏற்படும் சின்னச் சின்ன முரண்களை அப்படியே காட்சிப்படுத்தியிருப்பார். பாத்துமாவின் ஆடு குட்டிப் போட்ட பிறகு அந்தப் பாலுக்காக ஏங்கும் ஒட்டுமொத்து குடும்பமும் - பாலை நம்பி வாழ்க்கையை ஓட்டும் அப்பாவி பாத்துமாவும் இந்நாவலின் வாயிலாக நம் நினைவில் ஒட்டிக் கொள்கிறார்கள்.
அதே போல், ‘மதில்கள்’ பஷீர் எழுத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்த காலத்தில் உருவான படைப்பு இது. சென்டிரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைத் தண்டனை காலத்தில் எது, எது கிடைக்கும், எது எது கிடைக்காது, கிடைப்பதை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் அது தீக்குச்சியாக இருந்தால் கூட இரண்டாக, மூன்றாக சிறு அளவில் பிளந்து பயன்படுத்துவதும், சிறைத் தண்டனைப் பெற்றவர்களுக்கு உணவுப் பொருட்கள் எப்படியெல்லாம் வெளியிலிருந்து பொட்டலங்களாக வருகின்றன. ஒரு கட்டத்தில் தலைவர்கள் எல்லாம் விடுதலையாகும் போது இவருக்கு மட்டும் விடுதலை கிடைக்கவில்லை. இருப்பினும் என்ன? சிறையின் மதில்களுக்கு அடுத்து பெண்கள் சிறை அமைந்திருந்தது ஆறுதலாய் மாறியது; மதில்களுக்கு இடையில் காதல் மலர்வதும், சிறைக் காவலர்களை ஏமாற்றிக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலே மதில்களுக்கு இடையில் பேசிக் கொள்வதும், ரோஜா செடிகளை பரிமாரிக்கொள்வதுமாக காதல் உணர்வால் உந்தப்பட்டிருக்கும் நேரத்தில் இவருக்கு விடுதலை கிடைக்கிறது. அந்த நேரத்தில் பஷீர் எழுப்பும் கேள்வி அழகுணர்ச்சியோடு அமைந்துள்ளதை காணமுடியும். ‘யாருக்கு தேவை இந்த விடுதலை? யார் கேட்டது இந்த விடுதலையை?.
அதே போல் ‘உலக புகழ்மிகு மூக்கு’ என்ற சிறுகதை எள்ளலும் துள்ளலுமான, கேலியும் - கிண்டலுமான, நகைச்சுவையோடு கூடிய அப்புறதமானதொரு படைப்பு. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ‘மூக்கனுக்கு’ திடீரென மூக்கு வயிற்றின் தொப்புளைத் தொடும் அளவிற்கு தும்பிக்கைபோல் வளர்ந்து விடுகிறது. உடனே வேலையிலிருந்து நீக்கப்படுகிறான் மூக்கன். யாரும் இவனுக்கு வேலை தர மறுக்கின்றனர். வறுமையில் இருக்கும் மூக்கன் வெறும் காட்சிப்பொருளாய், கேலிப் பொருளாய் மாறுகிறான். இவனது துன்பத்தையோ, மன உலைச்சலையோ, வறுமையைப் பற்றியோ இந்த சமூகம் கவலைப்படாமல் இருப்பதையும், ஒரு கட்டத்தில் இந்த அபூர்வ மூக்கைப் பார்க்க வேண்டும் என்றால் காசு கொடுத்துதான் பார்க்க வேண்டும் என்ற நிலை வந்த சில ஆண்டுகளில் அவன் லட்சாதிபதியாவதும், அதற்கு பின் மூக்கனின் புகழ் உச்சத்திற்கு போவதும், அவனுக்காக பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்குவதும், டாக்குமெண்டரி படங்கள் எடுப்பதும், மத்திய - மாநில அரசுகள் விருதுகள் கொடுப்பதுமாக காட்சிகள் மிக விறு விறுப்பாக நகர்கிறது. ஒரு கட்டத்தில் எங்கு நோக்கினும் மூக்கனின் புகழ் பாடலையே மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பாவதும், பின்னர் மூக்கனுக்கு எதிராக அவதூறு கிளப்பும் போது அவனை சபிப்பதும், ஏசுவதுமாக இருக்கும் மக்கள் கூட்டம் இறுதியில் மூக்கனுக்கு ஜிந்தாபாத் போடும். இந்த சமூகத்தில் ஆட்டு மந்தைகளாய் இருக்கும் மக்கள் கூட்டத்தை மிக எள்ளலோடு அம்பலப்படுத்தியிருப்பார் பஷீர்.
மொத்தத்தில் அவரது கதை மாந்தர்கள் அனைவரும் எளிய மக்களே! அவர் கண்ட காட்சிகளையே முழுக்க முழுக்க எளிய மொழியில் கதையாக்கம் செய்திருக்கிறார். இலக்கியம் மேல் தட்டு வர்க்கத்திற்கே உரியது என்ற பத்தாம் பசலித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்தவர் பஷீர். அவரது வாழ்க்கை முழுவதும் மிக எளிமையாகவே வாழ்ந்தவர். அவரது இலக்கியமும் - வாழ்க்கையும் பிரிக்க முடியாதது என்றும் ‘ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்ட பெரிய ஒன்றுதான்’ என்பதை பஷீரின் படைப்புகளையும் - வாழ்க்கையும் கற்கத் துவங்கும் ஒருவரால் புரிந்துக் கொள்ள முடியும்!மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது, கேரள சாஹித்திய அகாடமி விருது, வல்லத்தோள் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் பஷீர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோழிக்கோட்டில் உள்ள பேப்பூரில் அவரது இறுதி நாட்களைக் கழித்த பஷீர் ஜூலை 5, 1994 அன்று இலக்கிய உலகிலிருந்து தன்னை நிரந்தரமாக விடுவித்துக் கொண்டார். கேரள மக்கள் வைக்கம் முகம்மது பஷீரை, ‘பேப்பூர் சுல்தான்’ என்று அன்போடு அழைக்கின்றனர். சுதந்திரப் போராட்ட வீரராக, இலக்கியப் போராளியாக, எளிய மக்களையும், ஜீவராசிகளையும் தன் படைப்பின் மூலம் உயிர்ப்பித்த பஷீரின் படைப்புகள் வழி தமிழ் மக்களை பயணிக்கச் செய்வோம் அதுவே அவருக்கு செய்யும் சிறப்பாகும்!

No comments: