November 27, 2007

காலக் கனவு!


வ. கீதாவின் சிந்தனையில் உருவான 'காலக் கனவு' இன்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அரங்கில் திரளான மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது. நாடகத்துறையில் புது முயற்சிகள் இதில் கையாளப்பட்டுள்ளது. வரலாறு புத்தகமாகவும். நாவலாகவும். திரைப்படமாகவும். கவிதையாகவும். டாக்குமென்டரியாகவும் வடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரலாறு நாடகமாக்கப்பட்டுள்ளது. அதுவும் தமிழக பெண்ணுரிமை வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணடிமைத்தனம் நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்போடு இணைந்தது. இந்தியாவில் இன்றைக்கும் அரை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு தகர்க்கப்படாமல் உள்ளதை நாம் அறிவோம்.
நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூக அமைப்பில் மிகவும் கீழாக ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட பெண்களை மிகவும் கீழானவர்களாகத்தான் நம் இந்திய சமூகம் சித்தரித்துள்ளது.
இத்தகைய சமூக அமைப்பில் பெண்களுக்கு இடப்பட்ட அடிமை விலங்குகளை உடைத்தெறிய தமிழகத்தில் எழுந்த பல்வேறு போக்குகளை இந்நாடகம் மிகவும் அற்புதமாக படம் பிடித்துள்ளது.
குறிப்பாக 120 ஆண்டு கால வரலாறு இதில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தேவதாசி முறை தொடங்கி பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது முதல். குழந்தை மணம். விதவை மறுமணம். உடன்கட்டை ஏறுதல். போன்ற பல்வேறு சமூக விசயங்களை ஆழமாக உள்ளடக்கி இந்நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அவல நிலைக்கு எதிராக போராடிய சுப்புலட்சுமி அம்மையார். மூவலுர் ராமமிர்தம்மாள். மணலுர் மணியம்மையார். ஜனாகியம்மாள். அயோத்திதாச பண்டிதர். பெரியார். மகாகவி பாரதியார்.... என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக எவ்வாறு குரல் எழுப்பினார்கள் என்பதை மிக அழகாக வடிவமைத்துள்ளனர்.
நாடகம் கதை சொல்லும் பாணியை கையாண்டிருந்தாலும். அதனை மிகவும் நுட்பமாக பாடலுடனும். அட்டைப் படங்களைக் கொண்டும். தங்கது துடிப்பான நடிப்பின; மூலமும் கண்முண் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.
குறிப்பபாக இதில் பெரும் பகுதி கையாண்டிருக்கும் மூல வசனங்கள் நெத்தியடியாக உள்ளது. தஸ்லீமா நஸ்ரினுக்கு எதிராக பிற்போக்கு பழமைவாதிகள் குரல் எழுப்பி வரும் வேளையில் தமிழகத்தில் சித்தி ஜிபைதா போகம் போன்ற இசுலாமிய பெண்மணிகள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துரைத்திருப்பது புதிய தகவலாக இருக்கிறது.
கதாபாத்திரங்களாக பேசும் ரேவதி. கவின். கப்னா. பொன்னி மற்றும் துணை பாத்திரங்கள் அனைவரும் மிசச் சிறப்பாக தங்களது பாத்திரத்தை நிறைவேற்றுகின்றனர்.
குறிப்பாக கவினின் குரல் இனிமையாக காற்றை கிழித்துக் கொண்டு கீதம் இசைக்கிறது. அதேபோல் பொன்னியின் குரல் கம்பீரமாக - கலகத்தின் குரலாக ஒலிக்கிறது.
கடந்த காலத்தை சிறப்போடு படம் டிபத்தவர்கள் நிகழ்காலத்தையும் கொஞ்சம் சித்தரித்திருக்கலாம். 40-60களில் திராவிட இயக்கம் பெண்ணுரிமை விசயத்தில் தாக்கத்தை உண்டாக்கியிருந்தாலும். அது தமிழகத்தில் தற்போது எந்த வடிவத்தில் உள்ளது என்பதை பரிசீலனைக்குரியதே!
அதே சமயம் இன்றைக்கு பெண்ணுரிமை சம்பந்தப்பட்ட விசயத்தில் சமூகத்திலும். அரசியலிலும். ஆரோக்கியமாக ஈடுபட வைத்திருப்பது இடதுசாரிகளே என்பதை பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மேலும் பெண்ணியம் என்ற தளம் தனித்து இயங்குவது சமூகத்தின் அடித்தளத்தை மாற்றுவதற்கு எந்த வகையிலான பாத்திரத்தை வகிக்கிறது. பெண்ணடிமைத்தனம் என்பது நிலவும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை மாற்றுவதோடு இணைக்கப்பட வேண்டும். நாடக ஒருங்கிணைப்பாளர்கள் இதனை கணக்கில் கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

No comments: