March 05, 2007

விலைவாசியும் கலைஞர் ஆட்சியும்!

திமுக ஆட்சிக்கு வந்தது முதல், இன்று வரை அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 80 சதவீதத்தை நிறைவேற்றி விட்டோம் என்று தொடர்ந்து டமுக்கடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதெல்லாம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணத் திட்டமே. இருப்பினும் ஆளும் கட்சிக்காரர்களே அரிசியை கடத்துவதும், அரிசி கடத்தலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை இல்லாததும், இந்த திட்டம் யாருக்கானது? என்ற சந்தேகத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்தி வருகிறது!

அதே போல், திமுகவின் இரண்டு ஏக்கர் நில விநியோகமும் இன்றைய சூழலில் பலத்த வரவேற்பை பெற்ற ஒரு மகத்தான திட்டம் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. இருப்பினும் இந்த திட்டமும் எதிர்பார்த்த வேகத்தோடு நடைபோடுவதில் தள்ளாட்டம் கண்டு வருகிறது.

ஜனநாயகத்தின் மறுபிறப்பாக திமுக தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சித்தாலும், சென்னை தில்லு முல்லு தேர்தலால் அதன் ஜனநாயக வேடம் கலைந்து போய் விட்டது. நீலச் சாயம் வெளுத்துப் போச்சு... டும். டும். டும்... என கொட்ட வைத்து விட்டது. மாநில சுயாட்சி பற்றி அடிக்கடி வெளுத்து வாங்கும் கலைஞர் ஏனோ தெரியவில்லை முலாயம் ஆட்சி விஷயத்தில் காங்கிரசின் நிலையே தன் நிலை என்று பறையடித்து விட்டார்! இதுதான் அரசியல் சாணக்கியத்தனம்!

ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு பாசிட்டிவ், நெகட்டிவ் இருக்கும் என்பார்கள்... ஆனால், திமுக ஆட்சியில் பாசிட்டிவ், நெகட்டிவ் என்று இரண்டும் சமத்தன்மையில் செயல்படுவதால் ஒரு தேக்க நிலைமையத்தான் கடந்த ஓராண்டில் கலைஞராட்சி வழங்கியிருக்கிறது.

மத்திய ஆட்சியின் வலுவான தூண் திமுக, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கேடு கெட்ட உலகமயக் கொள்கையால், முன்பேர வர்த்தகம் என்ற சூதாட்டத்தால் மக்களின் வாழ்வு பெருமளவிற்கு சூறையாடப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. சாதாரண மக்கள், ஏழை மக்கள் இந்த விலைவாசி உயர்வை கண்டு நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மாநில அரசு பால் விலையை ரூ. 1.25 உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது எரியும் நெருப்பில் பெரும் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் உள்ளது.

என் வீட்டிற்கு வந்திருந்த கிராமப்புறத்துவாசி அடித்த கமெண்ட் என்னை நெகிழச் செய்து விட்டது. “இரண்டு ரூபா அரிசின்னு சொல்லிட்டு... எல்லா விலையும் ஏத்திட்டானுங்க...” என்று. திமுக அரசு தான் செய்வதெல்லாம் நல்லது என அதுவாக நினைத்துக் கொண்டால் போதாது, இத்தகைய திட்டங்கள் மக்களிடம் என்ன தாக்கத்தை, விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்ப குறித்து சிந்திக்க வேண்டும். உளவுத்துறைகள் எப்போதும் சேம் சைடு கோல்தான் போடும்! அது அவர்களின் பிழைப்பப்பா.... பால் விலையில் கை வைத்த அரசுகள் எல்லாம் பாழாய் போன வரலாறு கலைஞருக்கு தெரியாமல் இருக்காது!

கேரளாவில் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறத்தில் காய்கறிகள், பருப்புகளை மொத்தமாக கொள் முதல் செய்து, குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் - மாவேலி கடைகள் மூலம் விற்க திட்டமிட்டிருக்கிறது கேரள அரசு. இத்தகைய பயனுள்ள நடவடிக்கைகளை நம் கலைஞர்.... அரசு மேற்கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!.... கலைஞர் புத்திகூர்மையான அரசியல்வாதி என்பதை நாமறிவோம்!

No comments: