April 19, 2006

மே-8 வெடிக்கப் போகும் குண்டு!

ஐய்யய்யோ, என்னங்க இது மே 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் நடக்கப்போகுது. அந்த நேரத்துல குண்டு வெடிக்குமா? இது ஏதோ தீவிரவாதிகளின் சதிச் செயல், அப்படி, இப்படி என்று மூளையை குழப்பிக் கொள்ள வேண்டாம். இது வேலையில்லா வாலிபர்கள் அம்மா ஆட்சிக்கு எதிராக வாக்குகளாக வைக்கப் போகும் குண்டு. அப்பாடா, இப்பத்தான் உசிரே வந்தது.

அம்மா ஜெயலலிதா இருக்காங்களே, அவங்க ரொம்ப தாயுள்ளம் படைத்தவங்க அதனாலதான் 1991 தேர்தல் அறிக்கையில “வேலையில்லாத் திண்டாட்டம் என் மடியில் கட்டியிருக்கிற வெடிகுண்டுன்னு” சொன்னாங்க. அந்த 5 ஆண்டு காலத்துல வேலைகேட்ட வாலிபர்களுக்கு போலீசின் தடியடியைத்தான் பரிசாக கொடுத்தாங்க.

அத்தோட விட்டாக்கூடப் பரவாயில்லைங்க... “வேலையா கிடைக்கல, நீங்க திருப்பூருக்குப் போயி பாருங்க,பல இடங்கள்ல வேலைக்கு ஆள் தேவைன்னு” போர்டு போட்டிருக்குன்னு ஒரே போடா போட்டாங்க! அத மட்டுமா செஞ்சாங்க “வேலையில்லா கால நிவாரணம்” அதெல்லாம் கொடுத்தா வாலிபர்கள் சோம்பேறியா போயிடுவாங்கன்னு அதையும் புடுங்கிட்டாங்க. அப்புறம் என்ன அடுத்த தேர்தல்ல அம்மா ஆட்சிக்கு வரமுடியவில்லை!

சரி 2001-ல என்ன சொன்னாங்க! வருடத்துக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை தருவோம்னு சொன்னாங்க! அம்மாவின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரே புள்ளிவிவர வாடைதான் அடிக்குது. ஆனால் இந்த ஆட்சியில எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்தாங்கன்னு மட்டும் சொல்ல மாட்டேங்குறாங்க.

ஆனா, ஆட்சிக்கு வந்ததும் மறக்காம ஒன்ன மட்டும் செஞ்சாங்க, அது என்ன தெரியுமா “வேலைக்கு ஆள் எடுக்க தடை” இப்படி ஒரு சட்டத்தை போட்டதால, அரசுத்துறையில இருந்த ஒரு லட்சம் காலி இடங்கள் இன்னமும் காலியாகவே இருக்குது! அம்மாவின் தாயுள்ளம் அத்தோடு நின்றதா? கஜானா காலி பண்ணிட்டாங்க, அரசு ஊழியர்களுக்கே பட்ஜெட்ல 98 சதவீதம் செலவு பண்றோம். அதனால ஆசிரியர்களில் 30 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பப்போறோம்னு இன்னொரு போடு போட்டாங்க... இதுதாங்க அம்மா...

அம்மா ஆட்சியில வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

வருடம் ஆண்டுப் பதிவு மொத்தப் பதிவு வேலை கொடுத்தது
2001 5,94,580 49,23,296 20,138
2002 4,43,566 50,57,420 10,303
2003 3,34,879 48,76,380 30,714
2004 5,67,619 41,51,170 16,700
2005 6,09,370 37,56,372 18,782

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அம்மா ஆட்சியில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதைத்தான் இந்த புள்ளி விபரம் காட்டுகிறது. அத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதே வீணான வேலை என்று வாலிபர்கள் கருதுவதால்தான் - தங்களை வேலையில்லாதவர்களாக புதுப்பித்துக் கொள்வதில் எந்தவிதமான பயனும் இல்லை என வெறுத்துப் போயுள்ளதையும் இது காட்டுகிறது. ரேஷன் கார்டு உள்ளவர்கள்தான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு கொள்ள முடியும் என்ற அம்மாவின் உத்திரவும் இதில் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் புதியதாக பதிவு செய்வோர் கடந்த ஐந்தாண்டு காலமாக 6 லட்சம் பேர் வரை பதிவு செய்கிறார்கள். ஆனால் வேலை வழங்குவது மட்டும் வெறும் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே! அதாவது 100 பேர் பதிவு செய்தால் 3 பேருக்கு மட்டுமே வேலை. இந்த புள்ளிவிபரத்தை மொத்தமாக பதிவு செய்தவர்களில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்துள்ளார் என்று பார்த்தால் அரை (0.5) சதவீதம்தான். தமிழகத்தில் கிராமப்புறத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களையும் சேர்த்தால் ஒரு கோடிபேருக்குமேல் வேலையில்லா பட்டியலில் இணைந்துள்ளனர். பதிவு செய்துள்ளவர்களில் 17 லட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மாதிரி சர்வே அமைப்பு (NSSO) நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து எடுத்த புள்ளி விவரப்படி தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 11.78 சதவிகிதமாக உள்ளதாக கூறியுள்ளது. இது தேசிய அளவில் 7.1 சதவிகிதம் மட்டுமே. அதாவது தேசிய அளவை விட 5 சதவீத அளவிற்கு வேலையின்மை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. எதற்கெடுத்தாலும் தமிழகம் முதல் மாநிலம் என்று அலறும் ஜெயலலிதா! வேலையின்மையை ஒழிப்பதில் முதல் மாநிலமாக்கினாரா?

முதல் மாநிலமாக்கினார் எதில் தெரியுமா? வேலையில்லாமல் வாழ்க்கைக்காக ஏங்கித் தவிக்கும் இந்த வாலிபர்களை போராடும் அரசு ஊழியர்களுக்கு எதிராக பயன்படுத்துவதில், மிரட்டுவதில் முதல் முன்மாதிரி மாநிலமாக்கியுள்ளார் அம்மா ஜெயலலிதா! அது மட்டுமா? படித்த இளைஞர்களுக்கு சாராயக் கடைகளில் வேலை கொடுத்துள்ளார். அதுவும் எப்படி வாழ்க்கைக்கே நாதியற்றவர்களிடம் டெபாசிட் தொகையாக ரூ. 10,000 பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு மாதம் ரூ. 1500 சம்பளமாக வழங்கியதில் நிச்சயம் தமிழகம்தான் முதல் மாநிலமாக இருக்க முடியும். இந்த வேலையில் சேருவதற்கே ரூ. 50,000 வரை ஊழல் நடைபெற்றதையும் ஊரரியும். அம்மாவின் ஆசியால், கருணையுள்ளத்தால் தமிழக வாலிபர்கள் ஏற்றம் பெற்றதை இதற்கு மேலும் அறிய வேண்டுமா?

இப்போது சொல்கிறார் ஐ.டி. துறையில் 5 லட்சம் பேருக்கு வேலை தருவோம் என்று, சிறு தொழில் துவங்க கடன் உதவி, புதிய தொழில்களை துவங்கப்போவதாகவும் அதிமுக தேர்தல் அறிக்கையில் அடுக்கியிருக்கிறார். அம்மாவின் தாயுள்ளத்தை 10 ஆண்டு ஆட்சியில் புரிந்து கொண்ட வாலிபர்கள் தற்போது வாக்குகளாய் வெடிக்கத் தயாராக உள்ளனர் மே 8-ல். வாலிபர்களை வஞ்சித்த அம்மா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, புதிய ஆட்சியை மலரச் செய்ய!

4 comments:

Muthu said...

excellent..even they stopped recruitment in state govt jobs..people should understand this

சந்திப்பு said...

Thanks Muthu.

நியோ / neo said...

அருமையாகப் புள்ளிவிவரங்களோடு இருக்கும் பதிவுகள் எழுதி கலக்கிவிட்டீர்கள்! தொடரட்டும் உங்கள் பணி. :)

சந்திப்பு said...

Neo Thankyou...