December 02, 2005

"எய்ட்சும்" தமிழக அரசியலும்

‘எய்ட்ஸ் விழிப்புணர்வு’ எய்ட்ஸ் கிருமிகள் தொற்றுவதை தடுப்பதற்கு மட்டு மல்ல; அரசியல் விளையாட்டிற்கும் பயன்படுத்தலாம் என்பதை தமிழகஅரசியல் பிரபலங்கள் நமக்கு காட்டியுள்ளனர்.
"எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய சர்ச்சையை, எப்படி தமிழ் உணர்விற்கு கொம்பு சீவி விடும் அரசியலாக மாற்ற முடிந்தது என்ற மர்மத்தை ஆராயும் முன்னர், உலக சுகாதார நிறுவனம் எய்ட்ஸ் பற்றி கூறியதில் ஒரு சில துளியையாவது நாம் அறிவது அவசியம்.
இன்று ஏழை நாடுகளின் சாபக்கேடுகளாக இருப்பது எய்ட்ஸ்சும் - எலும்புறுக்கி நோயும். இவ்விரண்டும் சகோதர நோய்களாகும். லகளவில் எய்ட்ஸ் நோய் கிருமி தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கையில் 13 சதம் இந்தியாவின் பங்காகும். ஆசிய அளவில் கணக்கிட்டால் 62 சதவீதம் இந்தியாவில் உள்ளனர்.இந்தியாவின் தென் மாநிலங்களில்தான் (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா...) இந்திய எய்ட்ஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் 80 சதவீதத்தினர் உள்ளனர்.
இம்மாநிலங்களில், ஓரின சேர்க்கை மூலமோ, போதை ஊசி மூலமோ எய்ட்ஸ் பரவுவது அபூர்வம்! ஆனால், முறை தவறிய ஆண் - பெண் பாலுறவே இந்நோய் இங்கு நடமாட முக்கிய காரணமாகும்.
காம வெறிபிடித்த பெரிய மனிதர்கள், அவர்களது வாரிசுகள், சினிமா ஹீரோக்கள், அதிகார வர்க்க பிரமுகர்கள் 18 வயதைக்கூட தாண்டாத இளம் பெண்களை ஆசை காட்டியோ, அன்பாக நடந்தோ புகழ் கிடைக்குமென்ற சபலத்தை ஊட்டியோ கசக்கி எரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் வயிற்று பிழைப்பிற்காக இப்பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுத்த தள்ளப்படுகின்றனர்.
இன்று பணக்கார நாடுகளில் தாயின் மூலம் குழந்தைக்கு தொற்றுவதும், மாற்றுக்குறுதி ஏற்றுவதின் மூலம் பரவுவதும் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இதற்கான மருந்துகளும், குறுதி சோதனைகளும் அங்குள்ளன. இந்தியா போன்ற ஏழை நாடுகளில்தான் இந்த மருந்துகளும், சோதனைக் கருவிகளும் எட்டாத உயரத்தில் உள்ளன. உலக வர்த்தக ஒப்பந்தங்களால், மாற்று மருந்து ஆய்வும், உற்பத்தியும் முடக்கப்பட்டுள்ளன. (கலாச்சார காப்பு அரசியல் நடத்துபவரின் மகன்தான் சுகாதார அமைச்சர் என்பதை நினைவில் கொள்வது நல்லது!)
இன்று இந்தியாவில் 7 லட்சம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து நோய் பரவுவதை தடுக்க தேவையான மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டியே நிலையிலேயே நம் அரசு உள்ளது. சுகாதாரம் தனியார்மயமானதால் இந்நோயாளிகளுக்கு அரசு மருந்துகளை வழங்குவதில்லை. தற்போது இவர்கள் எய்ட்ஸ் கிருமிகளை பரப்புபவர்களாக சீரழிகின்றனர். 30 ஆயிரம் பேர் மட்டுமே இந்த மருந்துகளை விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். மீதி ஏழைகள் நோய் பரப்பும் நடைப்பினங்களாக வாழ்கின்றனர்.
எ°ட்° விழிப்புணர்வு ஏதோ இத்தகைய நோய்ப் பற்றிய தகவல் அறிவது மட்டுமல்ல; உலக வர்த்தகத்தின் மர்மங்களையும், அரசுகளின் கொள்கைகளின் விளைவுகளையும் பற்றிய ஞானத்தையும் பெறுவதாகும். அரசியல் என்பது எய்ட்ஸ் விழிப்புணர்வோடு இந்த ஞானத்தை பரப்பும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பதென்ன!
எய்ட்ஸ் விழிப்புணர்வை ஊட்ட குஷ்பு ஏதோ கூறினார். சினிமா பிரபலங்கள் அரசியலிலே புகுந்தால் தங்களது வாக்கு வங்கி காலியாகி விடும் என்று அலரும் ராமதாசும், திருமாவளவனும் - குஷ்புவும் அரசியலில் குதிக்க முயலுகிறார் என்று பதட்டப்பட்டு "தமிழினத்தை இழிவுபடுத்திய குஷ்புவை" மாநிலத்தை விட்டோ விரட்ட வேண்டும் என்பதோடு, செருப்பு, துடைப்பம், முட்டை போன்றவற்றை காட்டி தங்களது கலாச்சார பெருமையை மீடியாக்களில் காட்டினர். இது குறித்து சுகாசினி ஏதோ கூற அதனையொட்டி கருத்துச் சுதந்திரம் காக்க சில நிருபர்கள் கூடினர். அதுவும் இவர்களின் எதிர்ப்பிற்கு இறையாக, ஆதிகால ஆரியர் - திராவிடர் சண்டை தொடர்வதாக நம்பும் தமிழின காவலரும் (கருணாநிதி) பதட்டப்பட்டார். "தமிழனுக்கு கொம்பா முளைத்திருக்கு என்ற சொற்றொடருக்கு விளக்கமளித்து போர்க்கொடியை உயர்த்தி விட்டார்." இதனால் அம்மா திமுக அளவற்ற மகிழ்ச்சியடைவதோடு, இந்தச் சண்டையால் மருத்துவமனைகளில் நடக்கும் நிர்வாக சீர்கேட்டால் எய்ட்ஸ் மருந்து கிடைக்காமையால், குறிதி சோதனை வசதி இல்லாததால் எழும் மக்களின் கோபம் திசை திரும்பியதற்காக பெரு மூச்சு விட்டுள்ளார் ஜெயா.
விளைவு என்ன? இந்த அரசியல் கலக்கலால் எய்ட்ஸ் விழிப்புணர்வு மங்கி விட்டது. அதற்கு பங்களிக்கும் ஆண் பிரபலங்கள் சமூக கண்காணிப்பிலிருந்து தப்பித்தனர்.
7 லட்சம் எய்ட்ஸ் நோய்க்கிருமியால் தாக்கப்பட்டவர்களுக்கு மருந்து கிடைக்கச் செய்யும் விழிப்புணர்வுக்கான வழி அடைக்கப்பட்டு விட்டது. எய்ட்ஸ் கிருமி கலந்த இரத்தத்தை சோதித்து அறியும் வசதி இல்லாததால் அறுவை சிகிச்சையின் போது பல குழந்தைகளும், இளைஞர்களும் எய்ட்ஸ் கிருமியால் தாக்கப்படும் வாய்ப்புகள் பெருகி விட்டன. இதுகுறித்த விழிப்புணர்வு இயக்கம் தற்போது திசை மாறி விட்டது.
இதனால், எய்ட்சும் - எலும்புறுக்கி நோயும் தமிழக அரசியலுக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கண்டு எள்ளி நகையாடினால் ஆச்சரியமடைய ஏதுவுமில்லை.
- பாண்டியன்
Guest Writer

No comments: